×

முசிறி பகுதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிழிப்புணர்வு கூட்டத்தில் முடிவு

தா.பேட்டை, ஆக.14: முசிறி பேரூராட்சி பகுதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிப்பது என்று செயல்அலுவலர் தலைமையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முசிறி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு 15ம் தேதி முதல் தடை விதிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு செயல்அலுவலர் தேவதாஸ் தலைமை வகித்தார். தலைமை எழுத்தர் ஜான்சேவியர், துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு 1.1.2019 முதல் முழுமையாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

இதனை செயல்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 15 முதல் முசிறி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடைசெய்வது, வியாபாரிகள் சங்க கூட்டம் நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுயஉதவி குழுக்கள் மூலம் பேப்பர் மற்றும் துணி பைகள் தயாரித்து வழங்க அறிவுறுத்துவது, பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்குவது, பேரூராட்சி பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வியாபாரிகள், திருமண மண்டபம், உணவுவிடுதி உரிமையாளர்கள், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி