×

பொதுமக்கள் கோரிக்கை காவிரியில் வீணாகும் தண்ணீரை நீர் நிலைகளில் நிரப்ப வேண்டும்

கரூர், ஆக.14: காவிரியில் வீணாகும் நீரை நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம் சார்பில் ராமசாமி, அளித்த மனுவில், தற்போது காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் இணைப்பில் கரட்டுப்பட்டியில் இருந்து பஞ்சப்பட்டி ஏரிக்கு இணைப்புக் கொடுத்து நீர் நிரப்ப வேண்டும். இதனால் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கும். சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே காவிரியில் இருந்து நேரடியாக குழாய் மூலமாவோ, அல்லது குடிநீர் இணைப்பு குழாய்களின் மூலமாகவோ ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கரூர் மாவட்டம் சார்பில் ராஜாங்கம் அளித்த மனுவில், கரூர் மாவட்டத்தில் தாதம்பாளையம், வெள்ளியணை, உப்பிடங்கலம், வீரராக்கியம், பஞ்சப்பட்டி, உடையாபட்டி, மாவத்தூர், போன்ற குளங்கள் உள்ளது. வெள்ளியணை குளத்திற்கு மாயனூர் தடுப்பணையில் இருந்து மணவாசி முடக்குச்சாலை மதுக்கரை வழியாக பைப்லைன் மூலம் பம்பிங் செய்யப்பட்டு தண்ணீர் கொண்டுவந்தால் நிலத்தடிநீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும். இதற்கான நடவடிக்கை எடுக்ககேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணராயபுரம் தொகுதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தங்கவேல் அளித்த மனுவில், 12ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை இருமுறை நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. உபரிநீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்கிறது.

இந்த நீரை கடவூர் பகுதியில் உள்ள ஏரி குளங்களுக்கும், பஞ்சப்பட்டி ஏரிக்கும் நிரப்ப வேண்டும். இதனால் சுற்றுவட்டாரத்தில் 16கி.மீ தூரத்துக்கு நீர்பெருகும். இதனால் குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதற்கான சர்தியக்கூறுகள் தற்போது உள்ளன. மாயனூர் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு குடிநீருக்காக ஒரு மீட்டர் விட்டம் உள்ள குழாய் பதிக்கப்பட்டு முழு வேலையும் முடிவடையாத நிலை உள்ளது. கடவூர் பகுதி வரை சோதனை முறையில் நீரேற்றம் செய்யப்படுகிறது. நத்தம் பகுதிக்கு தண்ணீர் செல்லாத நிலையில் உள்ளதால் தற்போது காவிரி உபரிநீரை அந்த பைப்லைன் மூலமாக கடவூர், பஞ்சப்பட்டி ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும். உடனடி தேவை கருதியும், வறண்ட கடவூர் பகுதியில் நிலத்தடிநீர் பெருகவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில் அளித்த மனு: மண்மங்கலம் தாலுகா கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்புலர் முதலியார் வாய்க்காலில், காவிரியில் ஒருமாத காலமாக தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையிலும், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. ஒருமாதமாக காவிரியில் தண்ணீர் அதிகமாக சென்றும் தண்ணீர் திறக்காத நிர்வாக சீர்கேடு, மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது. மாவட்ட நிர்வாகம் உடனே மேற்படி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு