×

பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல்

மணப்பாறை, ஆக.14: மருங்காபுரி ஒன்றியம் கார்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கார்வாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக கல்வித்துறை சார்பில் சுமார் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது. கார்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி இப்பகுதியினர் கடந்த 10 வருடங்களாக போராடி வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.1 லட்சம் மற்றும் 5 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளனர்.

ஆனால் அரசு அறிவித்த நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக மாற்றிய அறிவிப்பில் கார்வாடி பள்ளியை தரம் உயர்த்தி அறிவிக்கப்படவில்லை. இதை கண்டித்தும், பள்ளியை தரம் உயர்த்தக் கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள் 180 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் கிராம நாட்டாண்மை பழனிசாமி, ஊர் முக்கியஸ்தர்கள் மனோகர், அழகுசுந்தரம், வரதராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்ட துணை செயலாளர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மருங்காபுரி தாசில்தார் கருணாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி