×

திருவெறும்பூர், துவாக்குடியில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

திருச்சி, ஆக.14: திருவெறும்பூர், துவாக்குடியில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் ரவிக்குமார் அளித்த மனு:
சோமரசம்பேட்டையில் உய்யக்கொண்டான் வாய்க்காலிலிருந்து பிரியும் வீரங்கநல்லூர் கிளை வாய்க்காலை தூர்வாரக்கோரி இதுவரை 2 முறை மனு அளித்துள்ளோம். உள்ளாட்சி நிர்வாகம் மனு கொடுக்கும்போது மட்டும் பெயருக்கு சுத்தம் செய்து பின்னர் கண்டுகொள்வதில்லை. வாய்க்காலை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கொடியாலம் கிளை செயலாளர் ஆனந்த் அளித்த மனுவில், கொடியாலம் சப்பாணி கோயில் தெருவில் 25 குடும்பத்தினர் வசிக்கின்றனர். எங்கள் பகுதி மக்களுக்காக தனியாக மயானம் உள்ளது. இந்த மயானத்தில் எந்தவித கொட்டகையும் கிடையாது. இதனால் இறந்தவர்களின் உடலை வெட்ட வெளியில் வைத்து எரியூட்டும் நிலை உள்ளது.

மழைக்காலங்களில் எரியூட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே மயான எரிமேடை, காத்திருப்போர் கூடம் அமைத்துத்தர வேண்டும்.
திருவெறும்பூர் தொகுதி மக்கள் வளர்ச்சி சங்க தலைவர் குமார், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் அளித்த மனுவில், துவாக்குடி, திருவெறும்பூரில் பள்ளி, நெடுஞ்சாலை அருகே விதிகளை மீறி இயங்கி வரும் 3 டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றால் சாலையில் வாகன நெரிசல், விபத்து ஏற்படுகிறது  என தெரிவித்துள்ளனர். திருவெறும்பூர் சர்வக்கட்சி குழு ஒருங்கிணைப்பாளர்  பழனியப்பன் அளித்த மனுவில், ‘திருவெறும்பூர் 65வது வார்டு கக்கன் காலனி, நவல்பட்டுரோடு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும். கக்கன் காலனி பகுதியில் உள்ள மதுபானக்கடை 24 மணி நேரமும் இயங்குகிறது. கடந்த 7ம்தேதி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். 6ம் தேதி தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாளில் கலெக்டரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று கடையை அகற்றுவதாக தெரிவித்தார். ஆனால் அதேபகுதியில் நவல்பட்டு சாலையில் புதியதாக கடை திறந்துள்ளனர். எனவே இந்த மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ