×

மதுபாட்டிலை டிடிஇ திருடியதாக கூறி டிக்கெட் எடுக்காத பயணிகள் ரகளை ஜனசதாப்தி ரயிலில் பரபரப்பு

திருச்சி, ஆக.14: மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வந்த ஜனசதாப்தி ரயிலில் டிக்கெட் எடுக்காததால் டிடியிடம் சிக்கிய 2 பயணிகள் மதுபாட்டிலை அதிகாரிகள் திருடியதாக நாடகமாடினர். இச்சம்பவத்தால் திருச்சி ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி வழியாக மயிலாடுதுறை- கோவை இடையே ஜனசதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சிக்கு மாலை 5 மணிக்கு வந்து 5.10 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
நேற்று மதியம் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் புறப்பட்ட ரயில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவெறும்பூர் ரயில்நிலையம் அருகே டிக்கெட் பரிசோதகர்கள் அடங்கிய பறக்கும் படை ரயிலில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் செக்கிங் செய்துள்ளனர். அப்போது ரயிலில் கோவை செல்லும் பயணிகள் 2 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்கு பறக்கும் படையினர் அபராதம் கேட்டுள்ளனர்.

ஆனால் அந்த வாலிபர்கள் அதிகாரிகளிடம் தகராறு செய்து அபராதம் விதிக்க மறுத்துவிட்டனர். பின்னர் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் வந்ததும் 2 பேரையும் கீழே இறக்கி அபராதம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த வாலிபர்கள் முதலாவது பிளாட்பார்மில் உள்ள உயரதிகாரிகளிடம் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் நாங்கள் லக்கேஜில் வைத்திருந்த மதுபாட்டில்களை பிடுங்கிக்கொண்டனர். அதை தந்தால் மட்டுமே ரயிலில் ஏறுவோம். இல்லையென்றால் ரயிலை மறித்து போராட்டம் நடத்துவோம். இல்லையென்றால் ரயில் புறப்படும் போது ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்வோம் என கூறியுள்ளனர். இந்த பிரச்சனையால் 10 நிமிட இடைவெளிக்கு பிறகு புறப்பட வேண்டிய ரயில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திருச்சி ரயில்நிலையத்திலேயே முதலாவது பிளாட்பார்மில் நின்றது. அதன் பிறகு ரயிலில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகர்களிடம் உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததை திசை திருப்புவதற்காக இப்படி நாடகமாடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரயில்நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ‘வாலிபர்களிடம் சென்று டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததற்கு அபராதம் கட்டுங்கள், இதற்கு மேல் தகராறு செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து அதே ரயிலில் பயணம் செய்த வாலிபர்களின் உறவினர் கோவையை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் அபராதம் கட்டி அந்த வாலிபர்களை மீட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் திருச்சி ரயில்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜனசதாப்தி ரயில் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் நாங்கள் லக்கேஜில் வைத்திருந்த மதுபாட்டில்களை பிடுங்கிக்கொண்டனர். அதை தந்தால் மட்டுமே ரயிலில் ஏறுவோம். இல்லையென்றால் ரயிலை மறித்து போராட்டம் நடத்துவோம்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு