×

தோப்புகளில் லட்சக்கணக்கில் சூதாட்டம் அடிக்கடி மோதல் ஏற்படுவதால் பீதி

காரியாபட்டி, ஆக. 14:  காரியாபட்டி நான்குவழிச்சாலையையொட்டி, தோப்புகளில் லட்சக்கணக்கில் சூதாட்டம் நடந்து வருகிறது. விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லைப் பிரச்னையில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், சூதாட்டத்தில் அடிக்கடி மோதல் ஏற்படுவதால் அக்கம்பக்கத்தினர் பீதியடைகின்றனர். காரியாபட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவில் நான்கு வழிச்சாலையை ஒட்டிய தோப்புகளில் சூதாட்டம் நடந்து வருகிறது. இப்பகுதியில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல் நிலைய எல்லை வருகிறது. விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம் மற்றும் மதுரை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தோப்புகளில் சூதாடுகின்றனர். இங்கு வெட்டுச்சீட்டு, ரம்மியாட்டம் உள்ளிட்ட சீட்டு விளையாட்டுகள் நடக்கின்றன. இதில் லட்சக்கணக்கில் ரூபாய் மற்றும் நகைகள் புழங்குவதாக கூறப்படுகிறது. ஆட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் பிரச்னையை உருவாக்கி, மோதலில் ஈடுபடுகின்றனர். இதனால், அக்கம்பக்கத்தினர் பீதியில் உள்ளனர்.

போலீசார் கெடுபிடி காட்டினாலும், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசியல்வாதிகள் தலையீடுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சூதாட்டத்தின்போது பிரச்னை ஏற்பட்டதால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன், முக்குளம் பிள்ளையார்குளத்தை ராமன், மாந்தோப்பு மாரிமுத்து, பாலையம்பட்டி முத்துச்சாமி உட்பட 10 பேரை பிடித்து சுமார் 40 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து காரியாபட்டி ஆறுமுகம் கூறுகையில், ‘இப்பகுதியில் சூதாட்டம் பல மாதங்களாக நடந்து வருகிறது. மாவட்ட எல்லைப்பகுதி என்பதால் காரியாபட்டி, மற்றும் கள்ளிக்குடி போலீசார் இணைந்து, குற்றச்சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

காரியாபட்டி எஸ்ஐ ராமச்சந்திரன் கூறுகையில், ‘நான்குவழிச்சாலை பகுதி தோப்பில் சூதாட்டம் நடந்துள்ளது. மாவட்ட எல்லைப்பகுதி என்பதால் எங்கே புகார் கொடுப்பது என பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக 10 பேரை பிடித்து, ரூ.40 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்துள்ளோம். சூதாட்டம் மற்றும் குற்றச்சம்பவம் எதுவாக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும், யார் தலையீடாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...