×

விருதுநகரில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

விருதுநகர், ஆக. 14:  விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பாதசாரிகள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்ட தலைநகரான விருதுநகரில் சாலை வசதியோ, உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லை. நகரில் உள்ள தெருக்கள் ஏற்கனவே குறுகலாக இருக்கும் நிலையில் ஆக்கிரமிப்புகளால் மேலும் அகலம் குறைந்துள்ளது. ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதைகள் பாதசாரிகளுக்கானதா? இல்லை கடைக்காரர்களுக்கானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விருதுநகரில் மெயின்பஜார், காசுக்கடை பஜார், வடக்கு ரத வீதி, பழைய பஸ்நிலைய சுற்றுப்பகுதி, கச்சேரி ரோடு, புல்லாலக்கோட்டை ரோடு, மதுரை ரோடு, பழைய அருப்புக்கோட்டை ரோடு, சிவகாசி ரோடு, சாத்தூர் ரோடு, ராமமூர்த்தி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, ராமமூர்த்தி ரோடு, அரசு மருத்துவமனை முன்புறம், தந்திமரத் தெரு, கிருஷ்ணமாச்சாரி ரோடு, புளுகானுரணி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஆக்கிரமிப்பு அகற்ற என்ற பெயரில், மதுரை ரோடு முதல் மெயின் பஜார் வரை ஒப்புக்கு ஜேசிபி இயந்திரத்தை இயக்கி கடைகளின் முன்புறம் போடப்பட்ட பேவர் பிளாக்கற்களை மட்டும் தோண்டி போடும் நாடகத்தை முடித்தனர். நகரின் பிற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மதுரை ரோடு முதல் மெயின் பஜார் வரை 3 நாட்களில் முன்பை விட தற்போது கூடுதல் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் 5 முதல் 15 அடி தூர ரோட்டு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால் பாதசாரிகள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை தொடர்கிறது. இதே போல் விருதுநகரை ஒட்டிய பகுதிகளான ரோசல்பட்டி ஊராட்சியின் மல்லாங்கிணர் ரோடு, பாண்டியன்நகர் பகுதி, கூரைக்குண்டு ஊராட்சி, சிவஞானபுரம் ஊராட்சி, பாவாலி ஊராட்சி  பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகள் உரிய முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை