×

பாலையம்பட்டி ஊராட்சியில் 25 ஆண்டாக புறக்கணிக்கப்பட்ட போஸ்டல் காலனி

* சாலை, மின்விளக்கு வசதியில்லை * அடிபம்பு, மினிபவர் பம்பு இல்லை * தெருக்களில் வாறுகால் வசதியில்லை

அருப்புக்கோட்டை, ஆக. 14:  அருப்புக்கோட்டை அருகே, பாலையம்பட்டி ஊராட்சியில் உள்ள போஸ்டல் காலனியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை அருகே, பாலையம்பட்டி ஊராட்சியில் போஸ்டல் காலனி உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த காலனியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு 20க்கு மேற்பட்ட தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்கள் உள்ளன. ராமலிங்காநகரில் இருந்து போஸ்டல் காலனி, சிவநாயகி நகர், பசும்பொன் நகர் பகுதிகளை இணைக்கும் மெயின்ரோடு குண்டும் குழியுமாக மண் சாலையாக உள்ளது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறுகிறது. இந்த சாலையில் டூவீலர்களில் செல்பவர்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை இல்லை. போஸ்டல் காலனி தெருக்கள் அனைத்தும் மண்சாலையாக உள்ளன.

தெருக்களில் வாறுகால் வசதியில்லை. இதனால், கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இந்த காலனியில் உள்ள மெயின் வாறுகாலை இரண்டு ஒப்பந்ததாரர்கள் ஏலம் எடுத்து ஆளுக்கு ஒருபுறம் கட்டினர். ஆனால், கட்டிய வாறுகாலை இணைக்காமல் விட்டுவிட்டனர். இதனால், கழிவுநீர்  தேங்கி சுகாதாரக் கேட்டை உருவாக்குகிறது. லட்சக்கணக்கான ரூபாயில் அமைக்கப்பட்ட வாறுகாலில், கழிவுநீர் செல்லவில்லை. பெரும்பாலான தெருக்களில் மின்விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் திருட்டுச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பெண்கள் வெளியேற அச்சப்படுகின்றனர். காலனியில் மினிபவர் பம்புகள் அதிகமாக இல்லை. புதிதாக கட்டும் வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் குழாய் இணைப்பு வழங்கவில்லை. இதனால், ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விலைக்கு வாங்குகின்றனர். மழை காலங்களில் கழிவுநீரும், மழைநீரும் தெருக்களில் தேங்கி நிலத்தடி நீர் மாசுபடுகிறது. வீடுகளில் உள்ள போர்வெல்களில் வரும் நீர் கலங்கலாக வருகிறது. காலியான பிளாட்டுகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதிலிருந்து விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுக்கிறது. காலியாக உள்ள வீடுகளுக்கு புதிதாக வாடகைக்கு குடியேறி வர பயப்படுகின்றனர். புறநகர் பகுதிகளுக்காக பாலையம்பட்டி-மதுரை சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பயணிகள் அதிகமாக நிற்கமுடிவதில்லை. சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் செல்லும் மதுரை ரோட்டில் உயரம் குறைந்த அளவில் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. டிவைடரை உயரமாக கட்டி, ஒளிரும் விளக்குகள் பதிக்க வேண்டும். தெருக்களில் குப்பைத்தொட்டிகள் இல்லை. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே துப்புரவு பணியாளர்கள் குப்பையை சேகரிக்க வருகின்றனர். இதனால், வீடுகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தெருக்களிலும் கொட்ட குப்பைத்தொட்டி வசதி இல்லை. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் போஸ்டல் காலனி பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குமார் என்பவர் கூறுகையில், ‘போஸ்டல் காலனியில் தெருக்கள் மண்சாலையாக உள்ளன. தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. மழை காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுகிறது. தெருக்களில் மின்விளக்கு இல்லை. இப்பகுதியில் உள்ள கழிவுநீரோடை தூர்வாரப்படாமல் இருப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். மலர்ச்செல்வி கூறுகையில், ‘தெருக்களில் வாறுகால் வசதியில்லாததால் மழைகாலங்களில் மழைநீரும், கழிவுநீரும் தெருக்களில் தேங்குகிறது. இதனால், நிலத்தடி நீர் மாசுபட்டு போர்வெல்களில் இருந்து வரும் நீர் கழிவுநீர் கலந்து வருகிறது.  புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஊராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.  பொதுக் குழாய்களில் 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. தாமிரபரணி குடிநீரைத்தான் நம்பியுள்ளோம். தெருக்களில் போதுமான அடிபம்பு இல்லை. மினிபவர் பம்பு இல்லை. மழை காலங்களில் சாக்கடை வழியாக வீடுகளுக்கு பாம்புகள் வருகின்றன. எனவே, முறையான வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...