×

சொத்து விவர சுய மதிப்பீட்டு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சொத்து விவர சுயமதிப்பீட்டு அறிக்கையினை தாக்கல் செய்யாதவர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக சமர்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: சொத்து வரி சீராய்வு தொடர்பாக அரசால் கடந்த ஜூலை 19ம் தேதி மற்றும் 26ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், குடியிருப்பல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளவேண்டும். சொத்து வரி சீராய்வு செய்யும் பணி தொடங்கப்படவுள்ளதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சொத்து  உரிமையாளர்களும், தங்களது சொத்து தொடர்பாக சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை 31ம் தேதிக்குள் கீழ்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள முகப்புகளில் உரிய படிவத்தினை பெற்று, மேற்படி சொத்து சுய மதிப்பீட்டு  தொடர்பான அறிக்கையினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் நேரடியாக சமர்ப்பிக்கவும், மாநகராட்சி இணையதளத்தில் சொத்து விவர அறிக்கை படிவத்தினை பதிவிறக்கம் செய்து சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள முகப்புகளில் நேரடியாக சமர்ப்பிக்கவும்,  மாநகராட்சி இணையதள முகவரி மூலமாகவும் சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

மேற்கண்ட அனைத்து வழிமுறைகளின் மூலமாக கடந்த 12ம் தேதி வரை, 5,15,669 சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வு தொடர்பான சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை தாக்கல் செய்ய படிவங்களைப் பெற்றுள்ளனர்.  அவற்றில் மக்கள் ஆர்வமுடன் பூர்த்தி செய்து 42,324 படிவங்கள் திரும்ப சமர்ப்பித்துள்ளனர்.  இதில் இணையதளம் மூலமாக மட்டும் 6,579 படிவங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சொத்து விவர சுய மதிப்பீட்டு அறிக்கையினை தாக்கல் செய்யாத சொத்து உரிமையாளர்கள், தங்களது சொத்து விவர சுய மதிப்பீட்டு விவர அறிக்கையினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...