×

பயணிகள் உயிரோடு விளையாடும் போக்குவரத்து கழகம்: உடல் தகுதியில்லாத டிரைவர்களை பஸ் இயக்க சொல்லி நெருக்கடி

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) 9756 டிரைவர்கள், 10,172 கண்டக்டர்கள் உள்பட மொத்தம் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.  இந்நிலையில், உரிய உடல் தகுதியில்லாத டிரைவர்கள் பலரை வலுக்கட்டாயமாக வண்டி ஓட்டும்படி அதிகாரிகள் நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசு பஸ் டிரைவர்கள், பலர் பஸ் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே, பணியில் இருக்கும்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட டிரைவர்களை மருத்துவர்களிடம் அனுப்பி உடல்சோதனை செய்யும்படி எம்டிசி நிர்வாகம் அறிவுறுத்தும். உரிய சோதனைச் சான்றிதழ் கிடைத்த பிறகுதான் மீண்டும் அவர்கள் பணிக்கு அனுப்பப்படுவர்.

மருத்துவ சோதனையில், அந்த டிரைவருக்கு மீண்டும் பஸ் இயக்க தகுதியில்லை என்று சான்றளிக்கப்பட்டால் அவருக்கு மாற்று பணி வழங்கப்படும். அதன்படி, எம்டிசி நிர்வாகத்தால் நடத்தப்படும் அம்மா குடிநீர் மையங்கள் அல்லது பஸ் டெப்போ அலுவலகங்களில் உதவியாளர் பணி, காசாளர் அல்லது செக்யூரிட்டி உள்ளிட்ட மாற்று பணிகள் வழங்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் மருத்துவ சோதனை செய்து அதில் தகுதி பெற்றால்தான் அவருக்கு மீண்டும் டிரைவர் பணி வழங்கப்பட வேண்டும்.இந்நிலையில், மருத்துவ சோதனையில் உரிய தகுதி பெறாத பலரை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக டிரைவர் பணிக்கு திரும்புமாறு வலியுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

உதாரணமாக, வலிப்பு நோயுள்ள ஒரு டிரைவரை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பணி செய்ய உத்தரவிடுவதாக அந்த நபர் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் எம்டிசியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இவர், எம்டிசி மேலாண் இயக்குனருக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எம்டிசியில் நான் 2009ல் டிரைவராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2017 ஜனவரி 24ம் தேதி அன்று, எஸ்61 என்ற தடம் எண் கொண்ட பஸ்சை ஓட்டிசெல்லும்போது திடீரென எனக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரம்கட்டியதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எனது மருத்துவ சான்று அடிப்படையில் எனக்கு 6 மாதம் மாற்று பணி வழங்கப்பட்டது. கடந்த மாதம் 29ம் தேதியுடன் 6 மாதம் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் டிரைவர் பணி செய்ய வேண்டும் என்று கிளை மேலாளர் கட்டாயப்படுத்துகிறார்.

ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி நான் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருகிறேன். இன்னும் எனக்கு உடல் தகுதி சரியாக உள்ளது என்று சான்று வழங்கவில்லை. இந்த சூழலில், மீண்டும் பஸ் ஓட்டுவதால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு நிர்வாகத்துக்கும் அரசுக்கும் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற பயம் உள்ளது. எனக்கு வேறு வழியின்றி எனது குடும்ப சூழல் கருத்தில் கொண்டும், நிர்வாகத்தின் நிர்பந்தத்தாலும் டிரைவர் பணி செய்கிறேன். ஆனால் பணி செய்யும்போது எனக்கு வலிப்பு ஏற்பட்டு பயணிகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நிர்வாகமே முழு பொறுப்பாகும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...