×

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

தாராபுரம், ஆக.14: தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம்  செம்மேகவுண்டன்பாளையம் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் வசிக்கும் காலனி உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சீராக விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர், தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம் கிடைக்கும் குடிநீரும், மோட்டார் பழுது எனக் கூறி எடுத்துச் சென்ற அதிகாரிகள், அவற்றை சரிசெய்து பொருத்த வில்லை. ஆகவே, செம்மேகவுண்டன்பாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்மோட்டார் சரிசெய்து ஆழ்குழாய் கிணற்றில் பொருத்த வேண்டும்.

கூடுதலாக, மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரி 50 பெண்கள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் வந்து குண்டடம் ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்ச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்தனர். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ