×

அடிப்படை வசதிகள் அடியோடு இல்லை

போடி, ஆக.14:  அடிப்படை வசதிகள் அடியோடு இல்லாததால் சூலப்புரம் கிராம மக்கள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். போடி தேவாரம் சாலையில் சிலமலை கிராம ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கு பகுதியிலுள்ள தெற்கு, வடக்கு,மேற்கு ஆகிய சூலப்புரம் கிராமங்களில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பும், விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் சிலமலை கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சூலப்புரம் மலை அடிவாரப்பகுதியில் ஆழ்குழாய் அமைத்து உயரமான மேல் நிலைத்தொட்டியில் இருந்து குடிநீர் சப்பளை செய்யப்படுகிறது. இதனால் சூலப்புரத்திற்கு குடிநீர் கிடைக்கிறது. தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

விஷஜந்துக்களாலும், நாய்களாலும் இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. சாலைகள் அனைத்தும் மண்ணாக இருப்பதால் மழைக்காலங்களில் சகதியாக மாறி விடுகின்றன. சாக்கடை வாறுகால் வசதியில்லாததால் கழிவுநீர் வீடுகள் முன்பாக தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடமாக தெருக்கள் மாறியுள்ளன. குப்பைள் கொட்ட தொட்டிகளும் வைக்கப்படாததால், கண்ட இடங்களில் பொதுமக்கள் குப்பையைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி வருகிறது. இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் உருவாகி வருகிறது. எனவே, அடிப்படை வசதிகளான தெருவிளக்குகள், கழிப்பிடம், குப்பைதொட்டி, சாலை வசதிகளை சூலப்புரம் கிராமத்திற்கு  உடனடியாக செய்து தரவேண்டும் என  கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து போடி ஊராட்சி நிர்வாகத்தில் புகார்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,`தெருவிளக்குகள் அமைப்பதுடன், மண்சாலையை  சிமெண்ட் அல்லது பேவர்பிளாக் சாலைகளாக மாற்றி தரவேண்டும். நவீன கழிப்பிட வசதிகள் செய்து தரவேண்டும்’ என்று கூறினர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...