×

இடுக்கியில் எலி பிடிப்பு நெற்பயிரைக் காக்க விவசாயிகள் தீவிரம்

கம்பம், ஆக. 14:  கம்பம் பகுதியில் உள்ள வயல் வெளிகளில் நெற்பயிரை நாசம் செய்யும் எலிகளிடமிருந்து பாதுகாக்க இடிக்கி வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் நடவுப்பணி தொடங்கி களையெடுப்பு துவங்கியுள்ளது.
இந்த நிலையில் இளம் நெற்பயிர்களை எலிகள் நாசம் செய்து வருவதால் பயிர்கள் வளர வழியின்றி ஆரம்ப நிலையில் கருகி வருகிறது, இதனால் பெருமளவு மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க விவசாயிகள் வயல் வெளிகளில் உள்ள எலிகளை இடிக்கி வைத்து பிடித்து வருகின்றனர்.

மூங்கிலால் செய்யப்பட்ட இந்த இடிக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து விட்டு அதனை சுற்றியும் எலிகளுக்கு பிடித்த உணவாகிய அரிசி, நெல், நிலகடலை பருப்பு, தேங்காய் பூ ஆகியவற்றை கலந்து முதல் நாள் இரவு வைத்து விட்டு மறு நாள் பார்க்கும் போது வயல் வெளிகளில் உள்ள எலிகள் அனைத்தும் இடிக்கியில் சிக்கி கொள்கிறது. இதனால் பயிர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து எலி பிடிக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ` வயலில் ஆங்காங்கே இடிக்கி வைத்து எலி பிடித்தால் ஒரு எலிக்கு 30 ரூபாய் வரை விவசாயிகள் சம்பளமாக கொடுக்கின்றனர். இதன் மூலம் தினமும் ஒரு ஏக்கருக்கு 350 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. நெற்பயிர்கள் மட்டுமன்றி கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களுக்கும் இந்த இடிக்கியை பயன்படுத்தி எலிகள் தொல்லையிலிருந்து பாதுகாத்து வருகின்றோம்’ என்றார்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்