×

உயரும் பெரியாறு, வைகை நீர்மட்டம் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா?

கம்பம், ஆக. 14:  தொடர் மழையால் பெரியாறு, வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், 18 ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற ஆவலில் மானாவாரி விவசாயிகள் காத்திருக்கின்றனர். உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகளின் விவசாய நிலங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. ஆற்றுப்பாசனம் கிடைக்க வழியில்லாததால் இந்த நிலங்கள் மழையை நம்பியுள்ள மானாவாரி நிலங்களாக உள்ளன. இந்த நிலங்கள் பயன்பெறும் வகையில், லோயர்கேம்ப் தலைமதகிலிருந்து 40.80 கி.மீ கால்வாய் வெட்டி, பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடைக்கு கொண்டு சென்று இணைக்கும் வகையில் 1999ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரூ 26.52 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்டம்தான் 18ம் கால்வாய் திட்டம். நிலத்தடிநீர் அதிகரிக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே கால்வாயும் இந்த 18ம் கால்வாய்தான்.

இத்தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 10 கிராமங்களில் உள்ள 29 கண்மாய்கள், போடிதாலுகாவில் 3 கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் என 44 கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படும். இக்கண்மாய் நீரினால் உத்தமபாளையம் தாலுகாவில் 2ஆயிரத்து 568.90 ஏக்கர் நிலமும், போடிதாலுகாவில் 2ஆயிரத்து 45.35 ஏக்கர் என 4ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கடந்த 2010ம் ஆண்டு முதல் முறையாக 18ம் கால்வாயிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 40 ஆண்டு காலமாக வறண்டு கிடந்த உத்தமபாளையம், போடி வட்டத்திலுள்ள ஏராளமான தரிசுநிலங்கள் விளைநிலமானதால் உணவு உற்பத்தி இருமடங்கானது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த சிலவாரங்களாக பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகமாகி அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணையின் இருப்புநீர் 5942 மில்லியன் கனஅடியாக உள்ளது.வைகையின் நீர்மட்டம் 61.15 அடியாகவும், அணையின் இருப்புநீர் 3828 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது பெரியாறு, வைகை அணைகளின் இருப்புநீர் 9770 மில்லியன் கனஅடியாக உள்ளது. பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 2200 னேஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. இத்தருணத்தில் 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், இப்பகுதியிலுள்ள தரிசு நிலங்கள் விளைநிலமாக மாறும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு