×

கருக்கன்காட்டுபுதூர் அரசுப்பள்ளியில் சத்துணவு இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

திருப்பூர்:  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அளித்த மனுக்கள் விவரம்: திராவிட தமிழர் கட்சி சார்பில் அளித்த மனுவில், `திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைபள்ளியில் அரசுப்பள்ளி சமையலராக அருந்ததியர் வகுப்பை சேர்ந்த பாப்பாள்  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஊர் மக்கள் எதிர்ப்பு காரணமாக பொய்யான புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக, பள்ளியில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் பணிபுரியும் சமையலறையில் சிசிடிவி கேமரா பொருத்தி பாப்பாளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கூறி உள்ளனர்.

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் அளித்த மனு:  ஆலாம்பாடி ஊராட்சி நெய்க்காரன்பாளையம் பகுதியில் தனியார் பால் பண்ணை அருகில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. அதை மீறி திறந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர். சின்னகோடங்கிபாளையம் கிராம மக்கள் அளித்த மனு: கோடங்கிபாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. சின்னகோடங்கிபாளையம், எம்.ஜி.ஆர். நகர், காரணம்பேட்டை மக்களின் கடும் எதிர்ப்பு போராட்டம்  காரணமாக கடையை மாற்றிக்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 45 நாட்களுக்கு மேல் ஆகியும் கடையை மாற்றாமல் காலம் தாழ்த்து வருகின்றனர்.

இந்நிலை, தொடரும் பட்சத்தில் பல்வேறு போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர். பல்லடம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: பல்லடம் பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் கடை எண் 2317 செயல்பட்டு வருகிறது. இந்த கடை பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்கை மற்றும் குடும்பத்தை இழந்து வருகின்றனர். எனவே, இதன் மீது கலெக்டர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஈட்டிவீரம்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனு: திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அருகில் உள்ள கருக்கன்காட்டுபுதூர் அரசு துவக்கப்பள்ளி துவங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை.

இப்பள்ளியில் மதிய சத்துணவு இல்லாமல் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், மதில் சுவர் மற்றும் குடிநீர் வசதி கூட இல்லாத நிலையில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகள் அளித்த மனு: திருப்பூர் மாவட்டம் நெரிப் பெரிச்சல் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் தங்க போதிய அடிப்படை வசதி இன்றி தவிக்கிறோம். தற்போது, ஒரு வீட்டில் மூன்று அல்லது நான்கு திருநங்கைகள் வசித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தரமாக இடம் ஒதுக்கித் தர வேண்டும். அதேபோல், குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  சோமனூர் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: சோமனூர் கருவம்பாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

ஆனால், அதில் ஒரு பகுதி மக்கள் மட்டும் அதிகப்படியான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வசிக்கின்றனர். ஆனால், நாங்கள் குறைந்த இடத்தில் வசித்து வருகிறோம். ஆகையால், அவர்கள் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டு குறைந்த இடத்தில் வசிக்கும் எங்களுக்கு இடத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும்.அவிநாசி ஒன்றியம் குட்டகம் ஊராட்சி திருமலைக்கவுண்டன்பாளையம் ஊர் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாக பாப்பாள் சமையலராக பணியாற்றி வருகிறார்.  அவர், வந்த பிறகு  ஊர் பொதுமக்கள் மீதும், வட்ட வளர்ச்சி அலுவலர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை, சிலர் திட்டமிட்டு ஊரின் அமைதியை குலைக்கும் நோக்கில் செய்துள்ளனர். இதுவரை, எங்கள் ஊரில் சாதி ரீதியிலான வன்கொடுமை நடந்தது இல்லை. ஆகவே, சத்துணவு  சமையலர் பாப்பாளை விசாரித்து துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு