×

கம்பி வேலிகளின் வரவால் அழிந்து வரும் பாரம்பரிய மரபு வேலிகள்

காங்கயம்: பாரம்பரியமாக தோட்டங்களை பாதுகாக்க அமைக்கப்பட்டு வந்த இயற்கை வேலிகள், கம்பி வேலிகள் வரவால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.விவசாயத்தில் ஈடுபட்டு வந்த முன்னோர்கள் தங்களது விவசாய நிலங்களை பாதுகாக்க இயற்கை முறையிலான கிழுவன், மலை கிழுவன், திரவைகள்ளி, கள்ளி ஆகியவற்றைக் கொண்டு வேலி அமைத்தனர்.  இவ்வாறு அமைக்கப்பட்ட வேலிகளின் உள்ளே எளிதில் நுழைந்துவிட முடியாது. தோட்டங்களுக்கு வெளி ஆட்கள் மட்டுமின்றி ஏனைய விலங்குகளும் நுழைய முடியாதபடி மிகவும் நேர்த்தியாக இந்த வகை வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த வேலிகள் பாதுகாப்புக்காக மட்டுமின்றி, வெள்ளாடுகள் உண்ணும் இலை, தழைகள், கொடிகள் வேலிகளில் படர்வதால் உபதொழிலாக வெள்ளாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காலப்போக்கில் செம்மறியாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அவற்றை பராமரிக்க ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டபோது மேய்ச்சல் நிலங்களை சுற்றிலும் இந்த வகை மரபு வேலிகளை அமைத்து அதற்குள் ஆடுகளை மேயவிட்டு வருகின்றனர். மேலும், வெயில் நேரங்களில் மேய்ச்சல் நிலங்களில் மேயும் கால்நடைகள், வேலிகளின் நிழலில் இளைப்பாறி வந்தன.

அதுமட்டுமல்லாமல், வேலிகளில் பிரண்டை, கோவக்காய் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கீரை, மூலிகை வகைகளும் வளர்ந்து பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுத்து வந்தது. ஆண்டுதோறும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் ஏற்கனவே உள்ள வேலிகளின் கிளைகளை வெட்டி நேர்த்தியாக உடைப்பு விழுந்த வேலியின் பகுதியில் நட்டு விடுவார்கள்.
புரட்டாசியில் தொடங்கும் பருவமழையால் வேலிகள் துளிர்விட்டு வளரத் தொடங்கும். இந்த சிறப்புமிக்க மரபு வேலிகள், கால மாற்றத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. மேலும், இருக்கின்ற வேலிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,`கம்பி வேலிகள் அதிக செலவு செய்யப்பட்டு அமைக்கப்பட்டாலும் வெளி ஆட்கள் நுழைவது தடுக்கப்படுமே தவிர மற்ற வகையில் எந்தப்பயனும் இல்லை. இவ்வகை வேலிகள் அழிவதுடன் மட்டுமன்றி, நமது ஆரோக்கியமும் அழிந்து வருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாது’ என்றார்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா