×

வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அதிருப்தி

வால்பாறை: வால்பாறை அரசு தேயிலைத்தோட்ட கழகத்திற்கு சொந்தமான எஸ்டேட்களை வனத்துறை வசம் ஒப்படைக்க டேன்டீ நிர்வாகம், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மூலம் கடந்த 26ம் தேதியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையுடன்  தயார் நிலையில் உள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள டேன்டீ எஸ்டேட்களில் தேயிலை 2363.21 ஏக்கரும், பராமறிப்பற்ற பகுதிகள் 279.10 ஏக்கரிலும், பராமறிப்பில்லா சிங்கோனா பயிர் 401.07 ஏக்கரிலும் என மொத்தம் 3041.86 ஏக்கர் உள்ளது. தற்போது டேன்டீயில் சுமார் 750 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிய இடத்தில் பாதி பேரே தற்போது பணியாற்றி வருவதால் தொடர் சரிவை தோட்ட நிர்வாகம் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் வனவிலங்கு தாக்குதலால் நடப்பாண்டில் சுமார் 8 பேர் உயிரிழந்தும், பலர் காயம் அடைந்து உள்ளதாலும், தொடர்ந்து யானைகள், சிறுத்தைகளால் அச்சுறுத்தல் நீடிப்பதாலும், தொழிலாளர்களின் நலன் கருதி டேன்டீ நிர்வாகத்திற்கு சொந்தமான பகுதிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களை எஸ்டேட்டுகளை விட்டு வெளியே அனுப்புவது குறித்து ஆலோசனை செய்து, அதற்கான திட்டமிடுதல் செய்ய அதிகாரப்பூர்வமான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் தமிழக மறுவாழ்வு துறை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ், தேயிலை வாரியத்தின் முதன்மை இயக்குனர் பவுல்ராசு, டேன்டீ பொது மேலாளர் ஜெயராஜ், பொள்ளாச்சி சப்.கலெக்டர் காயத்திரி, தொழிலாளர் பிரதிநிதி ஜெயராமன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனா். டேன்டீ நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் டேன்டீ நிர்வாகம் குன்னூர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து நேற்று வால்பாறையில் முகாமிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் வால்பாறை பகுதியில் உள்ள ஒருவர் கூட, சட்டமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர் கட்சி பிரதிநிதிகள் இல்லாமல் கமிட்டி அமைத்ததற்கு தொழிலாளர்களிடம் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தங்கள் பகுதியை சேர்ந்த  ஒருவர் கூட கமிட்டியில் இல்லை என்பதால் அதிருப்தியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மனு எழுதி, தொழிலாளர்கள் அனைவரிடமும் கையெப்பம் பெற்று வருகின்றனர். மாற்று பகுதிக்கு சென்று பணியாற்ற விரும்பமில்லை என்றும், வழக்கமான பணப்பயன்களுடன், 5 சென்ட் இடமும், குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் பண உதவியும் நிர்வாகம் வழங்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்