×

ரூ.15 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்ட உர தொழிற்சாலை இயங்காததால் இயந்திரங்கள் பழுதாகும் அபாயம்

ஊட்டி: ஊட்டி  நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை  அமைக்கும் பணி முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தொழிற்சாலை  துவக்கப்படாமல் உள்ளதால் இயந்திரங்கள் பழுதாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி  மாவட்டத்தின் இயற்கை அழகை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடாமல்  இருக்கவும் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு  மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர் மற்றும்  கிராமப்புறங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மக்கும் குப்பை மற்றும்  மக்காத குப்பை ஆகியவைகளை பிரித்து எடுக்கும் வகையில் இரு தொட்டிகள்  மற்றும் கன்டெய்னர்கள் ஆகியவை வைக்கப்பட்டு குப்பைகளை தனித்தனியாக போடவும்  மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

ஆனால், பொதுமக்களுக்கு போதிய  விழிப்புணர்வு இன்றி அனைத்து குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டி விடுகின்றனர்.  மக்கும் குப்பைகளோட பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து விடுகிறது.  இந்நிலையில், பிளாஸ்டிக்குகளை தனியாக பிரித்த எடுக்க ஊட்டி நகராட்சியில்  திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே,  தீட்டுக்கல் குப்பை கொட்டும் இடத்தில் உள்ள குப்பைகளை பிரித்து எடுத்து  அதிலிருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள  முடிவு செய்யப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு அப்போது நகராட்சி தலைவராக இருந்த  ராஜேந்திரன் முயற்சியால் இங்கு தொழிற்சாலை அமைக்கும் பணி  துவக்கப்பட்டது. அதற்காக அரசு ரூ.15 கோடி நிதியும் ஒதுக்கீடு பெறப்பட்டது.  

உடனடியாக தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. கட்டுமான பணிகள்  அனைத்தும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னதே முடிக்கப்பட்டது. இதற்கான  இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டு தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தப்பட்டன.  ஆனால், போதிய நிதி ஆதாரமும் இல்லாததாலும் கட்டுமான பணிகள் முடிந்து இரு  ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரம் தயாரிக்கும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.  இதே நிலை நீடித்தால், இந்த தொழிற்சாலை மட்டுமின்றி, அங்குள்ள இயந்திரங்களும் பழுதாகி குப்பையோடு குப்பையாக மறைந்து போகும் அபாயம் நீடிக்கிறது.  எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த தொழிற்சாலையை திறந்து விரைவில் உரம் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் இத்திட்டம் காணாமல் போகும் அபாயம் உள்ளது.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு