×

கேரளாவுக்கு வீணாக செல்லும் உபரிநீரை கோதவாடி குளத்துக்கு திறக்க வேண்டும்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம்  நடந்தது. இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல்,  ஆக்கிரமிப்பு அகற்றம், சாதிசான்று, புதிய ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 25க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். இதில், கோதவாடி குளம் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்துவோர் சங்கத்தினர்  முற்றுகையிட்டு கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘கிணத்துக்கடவு தாலுகா  குருநல்லிபாளையம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 350  ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக  போதிய மழையில்லாததால், இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பாமல் உள்ளது. இந்த  ஆண்டில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து  வருகிறது.

இந்த மழையால், சோலையார் மற்றும் பரம்பிக்குளம் அணைகள் நிரம்பி  அதிலிருந்து உபரிநீர் கேரள வழியாக சென்று கடலில் வீணாக கலக்கிறது. இந்த  சூழலில், சோலையார் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை கேதவாடி குளம்  மற்றும் தேவம்பாடி வலசு குளத்துக்கு மட்டுமின்றி, குளம் மற்றும்  குட்டைகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில்  கோதவாடி குளத்துக்கு தண்ணீர் வந்தால், அதனை சுற்றியுள்ள சுமார் 50க்கும்  மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரம்  சிறக்கும். எனவே, கேரளாவுக்கு வீணாக செல்லும் உபரிநீரை, பிஏபி வாய்க்கால்  வழியாக  கோதவாடி குளத்துக்கு திறப்பதற்கான போர்க்கால நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...