×

பாலக்காடு மாவட்டத்தில் மீண்டும் தொடர் மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரத்திற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் விடிய,விடிய மழை தொடர்ந்ததால் ஆனைக்கல் பகுதியில் நேற்று காலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர் வரத்து அதிகரிக்கவே மலம்புழா அணையின் நான்கு மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணை திறக்கப்பட்டுள்ளதால் தரைப்பாலங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் மூழ்கியது. கல்பாத்தி, மங்கரை, பாளி, பட்டாம்பி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலக்காடு கல்பாத்தி, சேகரிபுரம், அம்பிகாபுரம், ஒலவக்கோடு ஆகிய இடங்களில் மழை வெள்ளம் தாழ்வான பகுதியில் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீன்கரை, போத்துண்டி, காஞ்ஞிரப்புழா மங்கலம் ஆகிய அணைகளும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீன்கரை அணை திறப்பு: தமிழக-கேரள எல்லை கோவிந்தாபுரம் அருகிலுள்ள மீன்கரை அணையின் நீர்மட்டம் நேற்று 38 அடி நேற்று எட்டியது. இவ்வணையின் முழு கொள்ளளவு 39 அடியாகும். இதைத்தொடர்ந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...