×

தொடர்மழையால் பிஏபி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை  அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடரும் கன மழையால் பிஏபி திட்ட  அணைகளுக்கு நீர் வரத்து மேலும்  அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்த  தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில்  கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து பெய்த மழையால் தண்ணீர் வரத்து மேலும்  அதிகரித்ததுடன், மொத்தம் 120அடி  கொண்ட அணையின் நீர்மட்டம் ஜூன் மாதம் 21ம்  தேதி  118அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, மெயின்  மதகுகள் வழியாக உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

பின் இந்த மாதம்   துவக்கத்தில்  மழை குறைந்ததால், மதகுகள் வழியாக உபரி நீர்  வெளியேற்றப்படுவது சிலநாட்கள்  நிறுத்தப்பட்டது. இருப்பினும், பழைய  ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு என வினாடிக்கு சுமார்  500கன அடிவீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த  இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையால், மீண்டும் ஆழியார் அணைக்கு  நேற்று அதிகாலை நிலவரப்படி  வினாடிக்கு சுமார் 1800 கன அடி தண்ணீர் வரத்து  இருந்தது.  இதையடுத்து,  மீண்டும் அதே  கன அடி தண்ணீர்  உபரிநீராக  வெளியேற்றப்பட்டது. தற்போது ஆழியார் அணையின் நீர்மட்டம் 118.20அடியாக  உள்ளது.

 அதுபோல், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள மொத்தம்  72அடிகொண்ட பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால், கடந்த  மாதம் 23ம் தேதியன்று அணையின் முழு அடியையும் எட்டியதுடன், அந்நேரத்தில்  மெயின் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்,   இந்த மாதத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால்,  அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது மீண்டும் தொடர்ந்தது. இதில்  நேற்று முன்தினம் இரவில் பெய்த கன மழையால், பரம்பிக்குளம் அணைக்கு  தண்ணீர்  வரத்து வினாடிக்கு 3500கன அடியாகவும். அதே அளவு தண்ணீர் மெயின் மதகு  வழியாக உபரி நீராக ஆற்றில் திறப்பது தொடர்ந்துள்ளது.

தற்போது அணையின்  நீர்மட்டம் 70.50அடியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து  பெய்யும் தென்மேற்கு பருவமழையால், அணைகளுக்கு வரும் தண்ணீர் மதகு வழியாக  உபரியாக வெளியேற்றப்படுவது தொடரும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். மேலும், பருவமழை தீவிரத்தால் குரங்கு அருவியில் கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா  பயணிகள் குளிக்கும் இடத்தையும் தாண்டி, காட்டாற்று வெள்ளம்போல்  ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவது தொடர்ந்துள்ளது. இதில் நேற்றும், குரங்கு  அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,   சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்