×

சென்னிமலை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்

சென்னிமலை: சென்னிமலை அருகே காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே 1010 நெசவாளர் காலனி உள்ளது. இந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தனித்தனியே குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு தினமும் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இங்கு கடந்த சில மாதங்களாக 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறவே குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 1010 நெசவாளர் காலனி பொதுமக்கள் நேற்று காலை காலனி பிரிவு அருகே பெருந்துறை - பழனி மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் விரைந்து சென்று வாகனங்களை மாற்று பாதை வழியாக திருப்பி விட்டனர்.

பின்னர் பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, சென்னிமலை கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் 15 நாட்களில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் பெருந்துறை- பழனி ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி