×

தொடர் மழையால் நிரம்பி வரும் குளங்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர் மழையால் பல்வேறு குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தென்மேற்கு பருவமழைக்காலம் துவக்கம் முதலே கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குளங்களுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கோவை நகரில் நொய்யல் நீராதாரத்தில் கொளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன்குளம், செல்வ சிந்தாமணி குளம், கங்கநாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம், செங்குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சிக்குளம், கண்ணம்பாளையம் குளம், சூலூர் பெரியகுளம், சூலூர் சின்னக்குளம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது.

மேற்குதொடர்ச்சி மலையில் மீண்டும் தீவிரமாகியுள்ள தென்மேற்கு பருவமழையால் நொய்யல் ஆற்று பகுதியில் உள்ள வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் குளங்களுக்கு மீண்டும் வரத்துவங்கியுள்ளது. கோவை  உக்குளம் நிரம்பி விட்டது. அதற்கடுத்துள்ள சித்திரைச்சாவடி அணை நிரம்பி புதுக்குளம், கொளராம்பதி, நரசாம்பதி ஆகிய குளங்களுக்கும் தண்ணீர் வந்து நிரம்பி விட்டது. இதை தொடர்ந்து கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன்குளம் ஆகியவையும் நிரம்பி வழிகிறது.

அதேபோல், குனியமுத்தூர் வாய்க்கால் வழியாக வரும் சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயணசமுத்திரம் ஆகிய கடந்த மழைக்கே நிரம்பியது. மேற்கண்ட குளங்கள் தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் நிரம்பியது. இதை தொடர்ந்து பேரூர் பெரியகுளம் 90 சதவீதமும், செங்குளம் ஆகியவையும் நிரம்பியது.  குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்தும், செங்குளத்தின் சின்னக்குளத்தில் இருந்தும் வாய்க்கால் மூலம் தண்ணீர் குறிச்சி குளத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி குறிச்சிக்குளம் சுமார் 95 சதவீதம் நிரம்பி விட்டது.

அதேபோல், வெள்ளலூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளலூர் குளம் சுமார் 15 சதவீதம் நிரம்பியுள்ளது. மழை தொடர்வதால், இதுவரை நிறையாக குளங்கள் ஓரிரு தினங்களில் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தொடர்ந்து குளங்கள் நிரம்பி வருவதால் குளங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்