×

நீலகிரியை போல் கோவையிலும் நீர், யானை வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழுவை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்,‘‘கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், மருதமலை, தொண்டாமுத்தூர், வெள்ளிங்கிரி மலையடிவாரம், காருண்யா நகர், மதுக்கரை, போளுவாம்பட்டி, நரசீபுரம், ஆழியாறு, பொள்ளாச்சி ஆகிய வனப்பகுதிகளிலும், பல்வேறு மலையிடப்பகுதிகளிலும் யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

யானை வழித்தட ஆக்கிரமிப்பால் யானைகள் தடம் மாறி குடியிருப்பு பகுதிகளில், விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிக்கிறது. நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் மழைநீர் ஏரி, வாய்க்கால், பள்ளம் ஆகிய வழியாக குளம், குட்டை மற்றும் ஆறுகளுக்கு செல்வது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்டுகள், கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு கோவைக்கும் ெபாருந்தும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும்,” எனக்கூறப்பட்டுள்ளது.  தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அதன் மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், ‘‘பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணை, பரம்பிக்குளம் அணை, சோலைகள் அணை முற்றிலும் நீர் நிறைந்து உள்ள நிலையில், அதிலிருந்து பொதுப்பணித்துறையால் வெளியேற்றப்படும் தண்ணீர் கேரளா வழியாக அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இந்த தண்ணீரை பி.ஏ.பியை சார்ந்த வாய்க்காலில் மாரப்ப கவுண்டன் புதூர், தம்பதிபதி, செமணாம்பதி, குப்பிச்சிபுதூர் குளம், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ஆகியவற்றின் வழித்தடத்தில் திருப்பி திறந்து விட வேண்டும். இவ்வாறு தண்ணீர் திறந்து விடப்பட்டால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்,’’ எனக்கூறப்பட்டுள்ளது.

கோவை வீரகேரளத்தை சேர்ந்தவர் பாபு(39). மாற்றுத்திறனாளியான வீரகேரளம் பகுதியில் பெட்டிக்கடை வைக்க உரிய இடத்தை மாவட்ட நிர்வாகத்தினர் ஒதுக்கி தர வேண்டும் என மனு அளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி இதற்கு முன்னர் ஐந்து முறை மனு அளித்துள்ளார். ஆனால், மாவட்ட நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று 6வது முறையாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

Tags :
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி