×

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

ஊட்டி: நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அனைத்து நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில்  கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை இரு மாதங்களுக்கு மேலாகியும் இடைவிடாமல் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி மற்றும் குன்னூர் தவிர மற்ற பகுதிகளில் தினமும் மழை பெய்கிறது. இதனால், நீலகிரியில் மின் உற்பத்திக்காக பயன்பட்டு வரும் அப்பர்பவானி, அவலாஞ்சி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பைக்காரா உட்பட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

மின் உற்பத்திக்காக பயன்படும் அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்துக் கொண்டே செல்வதால் அனைத்து மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் அதிகபட்சமாக 800 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மழை குறைந்தால், இந்த இலக்கை எட்ட முடியாது. ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், சிங்காரா, மாயார், சிங்காரா புஷ்அப், அவலாஞ்சி, காட்டுகுப்பை, பைக்காரா, மரவகண்டி, முக்குறுத்தி உட்பட அனைத்து மின் நிலையங்களிலும் தற்போது 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 800 மெகாவாட்டிற்கு மேல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இது போன்று மிகை மின் உற்பத்தி செய்து பல ஆண்டு ஆன நிலையில், இந்த ஆண்டு குந்தா மின் வாரியம் தொடர்ந்து மின் உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறது. குந்தா மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் அதிபட்சமாக 800 மெகாவாட் மின்சாரம் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்ய முடியும். போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த பல ஆண்டுகளாக இந்த இலக்கை எட்ட முடியாத நிலை இருந்தது.

ஆனால், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து அணைகளிலும் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், தண்ணீர் வீணாக செல்லாமல் இருக்க அனைத்து மின் நிலையங்களும் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு தற்போது 800 மெகாவாட்டிற்கு மேல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதே போன்று மழை பெய்தால், இந்த இலக்கு தொடரும், என்றனர். நீலகிரியில் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா, முக்குருத்தி போன்ற பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு குறையாமல் உள்ளதால் தொடர்ந்து மின் உற்பத்தி அதிகப்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு