×

ஈரோடு ரயில் நிலையத்தில் லிப்ட், எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. தற்போது 1 மற்றும் 2வது பிளாட்பாரத்திற்கான லிப்ட் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள லிப்ட், எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு ரயில் நிலையத்தில் 4 பிளாட்பாரங்கள் உள்ளது. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு பார்சல் அலுவலகம் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் இருந்தததால் பார்சல்களை கொண்டு செல்வதற்காக லிப்ட் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் பயணிகளுக்கான லிப்ட் வசதிகள் ஏதும் இல்லை. நாளடைவில் பார்சல் அலுவலகம் ரயில் நிலையத்தின் பின்பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த லிப்ட் பழுதடைந்து போனது.இதனால் லிப்ட்டை பயன்படுத்த முடியாமல் அந்த பகுதி ரிசர்வேசன் கவுண்டராக மாற்றப்பட்டது. தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள் ரயில் ஏறுவதற்காக பிளாட்பாரத்திற்கு வருவதற்கு முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஈரோடு ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு ரயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 1 மற்றும் 2வது பிளாட்பாரத்திற்கு செல்லும் வகையில் தொடங்கப்பட்ட லிப்ட் அமைக்கும் பணி முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 3 மற்றும் 4வது பிளாட்பாரத்திற்கான லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதுகுறித்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகியும், முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான பாட்சா கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையம் முன்புறம் இருந்த பார்சல் அலுவலகத்திற்காக லிப்ட் வசதி செய்திருந்தனர். ஆனால் பார்சல் அலுவலகம் பின்புறம் மாற்றப்பட்டதால் லிப்ட் வசதி இல்லாமல் போனது.

நாங்கள் ரயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று போராடியதால் 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. ஆனால் பணிகளை இன்னும் முடிக்காமல் உள்ளனர். தற்போது 1 மற்றும் 2வது பிளாட்பாரத்திற்கான லிப்ட்ட வசதி மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு  பாட்சா தெரிவித்தார்.

Tags :
× RELATED கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை...