×

காய்ச்சலுடன் மக்கள் அவதி சங்கராபுரத்தில் பரவுது சிக்குன்குனியா?

காரைக்குடி, ஆக.14: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மர்மகாய்ச்சல் அதிகஅளவில் பரவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் 15 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தற்போதைய கணக்கெடுப்பின்படி 60 ஆயிரத்து 265 பேர் உள்ளனர். பல முக்கிய நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு வகையில் வளர்ச்சியடைந்த இப்பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் போதுமான அளவில் நடைபெறவில்லை. பணியாளர்கள் குறைவால் சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட முடியாத நிலை உள்ளது. 10 கிலோ மீட்டருக்கு குறைவாகவே கழிவுநீர் கால்வாய்கள் உள்ளதால் வீடுகளில் கழிவுநீரை தொட்டி அமைத்து தேக்கி வைத்துள்ளனர்.
பல இடங்களில் தெருக்களில் தான் கழிவுநீர் சங்கமம் ஆகி உள்ளது. காலியிடங்களில் முழுவதும் முட்புதர் மண்டியும், குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளன. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காததால் கொசு கும்மாளமிட்டு வளர்கிறது.

கடந்த 2012ல் தமிழகத்தில் முதல் முறையாக டெங்கு பரவியபோது இப்பகுதியில் கடுமையான பாதிப்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இப்பகுதியில் சிக்குன்குனியா காய்ச்சலை போன்று கடுமையான உடல், கை, கால், மூட்டு வலியுடன் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. பாதிப்பு ஏற்படும் போது மட்டும் கொசு மருந்து அடிப்பது, புகை அடிப்பது போன்ற பணிகள் நடக்கிறது. அதன்பிறகு கண்டுகொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. மாங்குடி (முன்னாள் ஊராட்சி தலைவர்) கூறுகையில், ‘‘கிராம ஊராட்சியாக உள்ளதால் போதிய அளவில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் பயன் இல்லை.

போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதார பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். இல்லையெனில் காரைக்குடி நகராட்சியில் செயல்படுத்தப்படும் பாதாளசாக்கடை திட்டத்தில் இந்த பகுதிகளையும் இணைக்க வேண்டும்’’ என்றார். சொக்கலிங்கம் (முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்) கூறுகையில், ‘‘ஒவ்வொரு வருடமும் மர்மகாய்ச்சலுக்கு 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த திமுக ஒன்றியக்குழு இருந்தபோது இப்பகுதியை தரம் உயர்த்தி அழகப்பாபுரம் பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா