×

காரைக்குடி அருகே அடிப்படை வசதியில்லாத அரசு ஐடிஐ

காரைக்குடி, ஆக. 14: காரைக்குடி அருகே, அரசு ஐடிஐயில் போதிய அடிப்படை வசதியில்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் ஐடிஐ வளாகத்தில் முகாமிட்டு வருகின்றன. காரைக்குடி அருகே, அமராவதிப்புதூரில் 33 ஏக்கரில் அரசு ஐடிஐ அமைந்துள்ளது. இங்கு வெல்டர், பீட்டர் உள்ளிட்ட 5 பிரிவுகளில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி என இரண்டு நகரங்களில் மட்டுமே அரசு ஐடிஐ உள்ளது. தொண்டி, திருவாடனை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், அமராவதிப்புதூரில் உள்ள அரசு ஐடிஐயில் போதிய அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ஐடிஐயில் கழிவறையை முறையாக சுத்தம் செய்வது கிடையாது என்பதால் துர்நாற்றம் வரும் நிலை உள்ளது. இதனால், மாணவர்கள் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். ஐடிஐ வளாகம் முழுவதும் முட்புதர் மண்டிக் கிடக்கிறது. மரங்கள் வளர்ந்து காடு போல் உள்ளது.

வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு, மாடு, நாய் என அனைத்து கால்நடைகளும் முகாமிட்டு வருகின்றன. ஒரு சில நேரங்களில் வகுப்பறைகளுக்குள் கால்நடைகள் புகுந்து விடும் சம்பங்களும் நடக்கிறது. தற்போது அமைக்கப்பட்டு வரும் நான்குவழிச்சாலையின் அருகே, இக்கல்வி நிறுவனம் இருப்பதால், சாலைகளில் அதி வேகமாக செல்லும் வாகனங்களை கடக்க முற்படும்போது, மாணவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அதற்குள் நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் பிரநிதிகள் உரிய நிதி ஒதுக்கி சுற்றுச்சுவர் உள்பட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘வளாகத்தை சுற்றி முட்புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், விஷப் பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது. முறையாக பராமரிக்காமல் குப்பை குவிந்துள்ளன. தவிர கால்நடைகள் தொல்லையும் அதிக அளவில் உள்ளது. கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்த நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாணவர்களுக்கு தேவையாக அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை’ என்றனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்