×

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் ‘பக்... பக்’ பயணம்

சிவகங்கை, ஆக. 14: சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பள்ளி சென்றுவர ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் 190 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் கிராமத்து மாணவர்களே. இந்த மாணவர்கள் பள்ளி சென்று வர அரசு டவுன் பஸ்களையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். திருப்புவனம், சிவகங்கை போன்ற ஒருசில பகுதிகளில் மட்டும் ஷேர் ஆட்டோக்களிலும் மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் மாணவர்கள் பள்ளி சென்று வரும் நேரங்களில் மிகக்குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. ஒரு சில நகர்ப்பகுதிகள் தவிர கிராமப்பகுதிகள் முழுவதும் பள்ளி சென்றுவர பல மணி நேரம் காத்திருந்து ஒரே ஒரு டவுன் பஸ்ஸில் ஏராளமான மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ்ஸின் படிக்கட்டுகள், மேற்கூரைகளில் மாணவர்கள் பயணம் செய்வது தினந்தோறும் நடந்து வருகிறது. ஷேர் ஆட்டோக்களிலும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

இப்பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான டவுன் பஸ்களில் தகரங்கள் பெயர்ந்திருப்பது, படிக்கட்டுகள் உடைந்திருப்பது, மேற்கூரை பலமின்றி என மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த பஸ்களில் ஆபத்தை உணராமலும் வேறு வழியில்லாமலும் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் விபத்துகளும் நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல... அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பயணத்தின் போதும் உயிருக்கும் உத்தரவாதம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் கூடுதல் பஸ்களை அரசு இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு பஸ் ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது, ‘‘பள்ளி சென்று வரும் நேரங்களில் மிகுந்த பயத்தோடு பஸ்ஸை இயக்க வேண்டியுள்ளது. பள்ளி நேரங்களில் குறைந்த பட்சம் நூறு பேர் வரை பஸ்ஸில் ஏறுகின்றனர். வெளி மண்டலங்களில் இனிமேல் இயக்க முடியாது என்ற நிலையில் உள்ள பஸ்ஸை வாங்கி வந்து கிராமப்பகுதிகளில் இயக்குகின்றனர். பள்ளி நேரங்களில் கூடுதலாகவும், தரமான பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா