×

தொண்டி அருகே அலங்கோலமாக காணப்படும் தீர்த்தாண்டதானம் கடற்கரை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

தொண்டி, ஆக.14: தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். ராமபிரான் சீதையை தேடி இலங்கைக்கு செல்லும் போது தாகம் ஏற்பட்டுள்ளது. தாகத்தை தணிக்கும் பொருட்டு அகத்திய முனிவரால் நீர்த்த தடாகம் உருவாக்கப்பட்டது. அதுவே இங்குள்ள சர்வதீர்த்தமாகும். இங்குள்ள ஈஸ்வரன் சர்வதீர்த்தேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ராமபிரான் தன் முன்னோர்களுக்கு இக்கடற்கரையில் தர்ப்பணம் செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் தேவிபட்டினம் போல் இங்கும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் அளவுக்கதிகமான பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய வருவார்கள்.

ஆனால் இந்த கடற்கரை பகுதி முழுவதும் கடுமையான பாசி மற்றும் சகதியாக உள்ளது. இது பக்தர்களுககு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே தீர்த்தாண்டதானம் கடற்கரையை கடல் பகுதியை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இப்பகுதியை சேர்ந்த முனியசாமி கூறுகையில், ‘‘ஆடி மற்றும் தை மாதங்கள் தவிர்த்து தினமும் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருகின்றனர். கடல் சாக்கடை போல் கலங்கி கிடப்பதால் குளிக்க சிரமப்படுகின்றனர். சிறிய அளவிலாவது கடல் பகுதியில் உள்ள பாசி உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கடலுக்குள் செல்வதற்கு வசதியாக சிறிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்