×

எங்கு பார்த்தாலும் கழிவுநீர் கலக்கிறது வைகையில் கால் வைக்க முடியவில்லை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

பரமக்குடி, ஆக.14: பரமக்குடி பகுதியில் கழிவுநீர் கலப்பதால் வைகை ஆறு நாசமாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். பரமக்குடியை சுற்றிலும் உள்ள கழிவுநீர் வைகை ஆற்றுப்பகுதியில் வந்து கலக்கிறது.  இதுதவிர தரைப்பாலம் அருகே ஆற்றுப்பகுதியில் பலர் மோட்டார் மூலம் தண்ணீர் நிறைத்து குளிப்பதற்காக தொட்டிகள் வைத்துள்ளனர்.  தினந்தோறும் இப்பகுதியில் உள்ள ஏராளமானோர் காலை, மாலை நேரங்களில் இந்த குளியல் தொட்டிகளை பயன்படுத்துகின்றனர்.  இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் வைகையாற்று பகுதியில் உள்ள பள்ளமான இடங்களில் குட்டைபோல் நிறைந்துள்ளது.  இதனால் அப்பகுதி வீசும் துர்நாற்றத்தால் தரைப்பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.  கழிவுநீர் சேரும் இடத்திற்கு அருகில்  குடியிருப்பு வீடுகள் உள்ளதால்  அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.  

ஆற்றப்பகுதியில் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் அப்பகுதியில் காய்ச்சல், தொற்று வியாதிகள் பரவி வருகிறது.  நகராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் சேருவதை தடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கழக உறுப்பினர் ராஜா வேலுச்சாமி கூறுகையில், ‘‘நாள்தோறும் தேங்கும் கழிவுநீரால் தரைப்பாலத்தில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.  ஏற்கனவே காலை, மாலை நேரங்களில் பலர் பொழுது போக்கிற்காக ஆற்றுப்பகுதிக்கு சென்று வந்தனர்.  தற்போது ஆற்றுப்பகுதி முழுவதும் கழிவுநீர் சேர்ந்துள்ளதால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நீர் ஆதாரமும் குறைந்து வருகிறது.  பரமக்குடியில் விரைவில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை