×

ராமநாதபுரம் நகரங்களில் பார்க்கிங் இல்லாத கடைகளால் ‘டிராபிக்’

ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல் புதிய கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி கொண்டே செல்வதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். கடைகள், வணிக வளாகங்கள் துவங்கும்போது தேவையான பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு நடத்திய பின்புதான் நகராட்சி அனுமதியளிக்க வேண்டும். ஆனால் ராமநாதபுரத்தில் அக்ரகாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் தெரு, சாலைதெருக்களில் இதை ஆய்வு செய்யாமல் அதிகளவில் கடைகள் திறக்க அனுமதிப்பாக புகார் எழுந்துள்ளது. இதனால் கடைகளுக்கு வருபவர்கள் ரோட்டில்  பார்க்கிங் செய்கின்றனர். இதன் காரணமாக இந்த சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சாலைகளை கடந்து செல்ல அதிக நேரம் ஆகிறது. எனவே புதிதாக திறக்கப்படும் நிறுவனங்கள் பார்க்கிங் வசதி செய்துள்ளனவா என ஆய்வு செய்த பின்பே அனுமதியளிக்க வேண்டும்; இதுவரை முறையாக  பார்க்கிங் வசதி செய்யாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என,  நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டிணம்காத்தான் சரணவன்  தெரிவிக்கையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் ராமநாதபுரம் டிராபிக் ஆயிரம் மடங்கு அதிகமாகிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் இப்பகுதியில் உள்ள பார்க்கிங் வசதியில்லான வணிக நிறுவனங்கள்தான்.  நான் மாலை வேளையில் இந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டுமானால் ஸ்டேட்பாங்க் அருகில் டூவீலரை நிறுத்திவிட்டு, நடந்து சென்றுதான் சாமான்களை வாங்கி வருவேன். இந்த பகுதியில் உள்ள கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் வாகனங்களை நிறுத்தவே பார்க்கிங் வசதியில்லை. அவர்களது வாகனமும் ரோட்டில் தான் நிறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகிகள் பார்க்கிங் இல்லை என்றால் அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அறிவிப்போடு நிறுத்தி விடுகிறார்கள். அடுத்தநாளே பார்க்கிங் வசதி இல்லாத புதிதாக கடைகள் திறக்கப்படுகின்றன. அதன் மர்மம்தான் தெரியவில்லை’’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை