×

சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை பெறலாம் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிவகங்கை, ஆக.14: சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். புதியவர்கள் மற்றும் புதுப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வி பயிலும் பள்ளி மாறாமல் கடந்த ஆண்டில் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவ, மாணவியர் மட்டுமே புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

செப்டம்பர் 30க்குள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களைச் சரிபார்த்து தகுதியுள்ளோர் பட்டியலை மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.minorities.htm என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை