×

மாநகர அரசு பஸ்களில் ரூ.50 டிக்கெட் மீண்டும் வழங்க வலியுறுத்தல்

மதுரை, ஆக. 14: மதுரையில் மாநகர அரசு பஸ்களில் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த கூடிய  சலுகை கட்டணமான ரூ.50 டிக்கெட் மீண்டும் வழங்க வேண்டும் என கோரி மனு கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மாநகர அரசு பஸ்களில் முன்பு சலுகை கட்டணமாக ரூ.50 டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டை ஒரு நாள் முழுவதும் மாநகர பஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதனை அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்திய பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து ரூ.50 சலுகை கட்டண டிக்கெட்டை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரத்து செய்தது. இதனால், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி  கணேஷ்பாபு  நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கோரிக்கை மனு கொடுத்தார், அதில், ‘ரூ.50 கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆட்டோவில் ஏறாமல் பொதுமக்கள் பஸ்ஸில் மட்டும் ஏறி இறங்கினர். தற்போது இந்த சலுகை டிக்கெட் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள், பெண்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து இந்த சலுகை கட்டண டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மதுரையில் ரூ.50 சலுகை கட்டண டிக்கெட் வழங்க வேண்டும்.  மேலும், மாட்டுத்தாவணியில் இருந்து சமயநல்லூர், அலங்காநல்லூர், பல்கலைக்கழகம், அவனியாபுரம், திருநகர், திருப்புவனம், அழகர்கோயில் பகுதிக்கும், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, காரியாபட்டி, மேலூர், திருப்புவனம், திருவாதவூர், பாலமேடு அழகர்கோயில், வண்டியூர் ஆகிய பகுதிகளுக்கும் நகர் பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடர்ந்து பஸ்கள் இயக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.  இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ பரிந்துரை செய்தார்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...