×

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரை, ஆக. 14: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றகையிட்டனர். உசிலம்பட்டி அருகே உள்ள பேயம்பட்டியில் 200க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செய்து தரப்பட்ட குடிநீர் வசதிக்கான போர்வெல் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழுதானது. இதுவரை சரி செய்ய வில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் வேப்பனுத்திற்கு சென்று குடிநீர் பிடித்து வந்துள்ளனர். அப்பகுதி மக்கள் 3 குடத்துக்கு மேல் பிடிக்க கூடாது என அவர்களை தடுத்து அனுப்பியுள்ளனர். இதனால் குடிநீர் கிடைக்காமல் கடந்த 6 மாதங்களாக இப்பகுதி மக்கள் தவித்துள்ளனர்.

இதுதொடர்பாக 4 முறை செல்லம்பட்டி ஓன்றிய ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேயம்பட்டியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். குடிநீருக்காக ஊர்விட்டு ஊர் சென்று பிடிக்க வேண்டியுள்ளது. மேலும் ரோடு, தெருவிளக்கு, மயான வசதி செய்து கொடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.  பின் போலீசார் அவர்களில் முக்கியமானவர்களை அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கொடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஊராட்சி இயக்குநருக்கு டிஆர்ஓ பரிந்துரை செய்தார்.

Tags :
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்