×

அறிவித்து 2 மாதமாகியும் எய்ம்ஸ்க்கு அரசாணை வெளியிடாமல் இழுத்தடிப்பு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டு விழா நடக்குமா?

மதுரை, ஆக. 14: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து 2 மாதங்களாகியும் அதற்கான மத்திய சுகாதார துறையின் அரசாைணை வெளியிடாமலும், பூர்வாங்க பணிக்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு அளிக்காமலும் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி  செப்டம்பரில் அடிக்கல் நாட்டு விழா நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என 2015ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இடம் தேர்வு செய்வதில் 3 ஆண்டுகளாக இழுபறி நீடித்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த பிறகு மதுரை தோப்பூரை தேர்வு செய்து கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 240 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அறிவிப்பு வெளியானதும், மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மாறி மாறி தோப்பூருக்கு வந்து ஆய்வு நடத்தி விட்டு சென்றனர்.

ரூ.1,500 கோடி திட்டம் என்பதால் 10 மாடி கட்டிடம் கட்டுவதற்கான வசதி, சாலை, ரயில் போக்குவரத்து, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதற்கான அறிக்கையை தமிழக சுகாதார துறை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியை சுற்றிலும் மந்தமாக கிடந்த ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடித்தது. 2 மாதமாக நிலவிய பரபரப்பு தற்போது அடங்கி, வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. ஏனென்றால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிர்பார்க்கப்பட்ட  மத்திய அரசின் சுகாதார துறை அரசாணை இன்னும் வெளியாகவில்லை. பூர்வாங்க பணிக்கு முதற்கட்ட நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக பாராளுமன்ற நடப்பு கூட்ட தொடரில் அந்த தொகுதி எம்.பி. கேட்ட கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர் “நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று பொத்தாம் பொதுவாக பதில் சொல்லி நழுவி கொண்டுள்ளார்.

உத்தரவு குறித்தோ, நிதி ஒதுக்கீடு குறித்தோ பதில் சொல்லாதது மர்மத்தை உண்டாக்கி உள்ளது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதாவது செப்டம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட திட்டமிட்டு இருப்பதாக மத்திய ஆளும் கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. அரசாணை வெளியிடாமலும், நிதி ஒதுக்கீடு இல்லாமலும் 2 மாதமாக இழுத்தடிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரிகள் ஆய்வுகளின்றி மவுனம் காக்கின்றனர். இதனால் திட்டமிட்டபடி செப்டம்பரில் அடிக்கல் நாட்டு விழா நடக்குமா? தள்ளி போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடைத்தேர்தல் விதிமுறை
* திருப்பரங்–்குன்றம் தொகுதி தற்போது காலியாக இருப்பதால், இடைத்தேர்தல் வரும் நவம்பரில் நடக்குமா? அல்லது பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ள தோப்பூர், இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. எனவே தேர்தல் விதிமுறைப்படி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அந்த தொகுதி மட்டுமின்றி மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறை அமலாகிவிடும். எனவே எந்த திட்டத்திற்கும் அரசாணை வெளியிடேவோ, அரசு விழா நடத்தவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...