×

குடிநீரே சுத்தமா வர்றதில்லை ஆயிரம் அடி போரா போட்டீங்க அளந்து காட்டுங்க... ஒத்துக்கிறோம்? குறைதீர் கூட்டத்தில் மக்கள் குமுறல்

திண்டுக்கல், ஆக. 14: ஆழ்குழாயை ஆயிரம் அடிக்கு மேலாக அமைத்ததாக கூறி முறைகேடு செய்துள்ளதால், நிலத்தடிநீர் இருந்தும் ரெட்டியபட்டியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக பெருமாள்குளத்தில் ஆழ்துளை அமைத்து அங்கிருந்து குழாய்களில் குடிநீர் பெற்று விநியோகிக்கப்பட்டு வந்தது. அதே போல் ரெட்டியபட்டியிலும் 3 குழாய்கள் இருந்தன. இருப்பினும் குடிநீர் சப்ளை முறையாக இல்லை என்று கூறி இப்பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இதுகுறித்து இவர்கள் கூறுகையில், ‘‘ஆயிரம் அடிக்கு மேல் போர் போட்டதாக கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் வெறும் 300, 400 அடிக்கு மட்டுமே ஆழ்துளை அமைத்துள்ளனர். இதனால் நிலத்தடிநீர் இருந்தும் அவற்றை பெற முடியாத நிலையில் இப்பகுதி உள்ளது. எனவே ஆழ்குழாயின் ஆழத்தை அளந்து காண்பிக்க வேண்டும். மேலும் ஆழப்படுத்த வேண்டும். இதனால் 2 கிமீ தூரத்தில் உள்ள பெரியகோட்டைக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியதுள்ளது. 100 நாள் வேலையும் எங்களுக்கு தருவதில்லை. 2 கிமீ தூரம் உள்ள பெரியகோட்டைக்கு சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. தெருவிளக்கும் சரிவர எரிவதில்லை. அடிப்படை பிரச்னைகளை தீர்க்காவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்றனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...