×

பணியிலும், பயணத்திலும் புறக்கணிப்பு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ‘காத்திருப்பு’ திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல், ஆக. 14: கண்டக்டர்கள் இல்லா பேருந்துகளில் அனுமதிக்காதது, நூறு நாள் வேலைத்திட்டத்தில் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து இவர்கள் கூறுயில், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன பணிகள் வழங்கலாம் என்று அரசாணை எண்52 விளக்குகிறது. ஆனால் இந்த அரசாணை திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாகாத நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினோம். இதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். இதற்கு முழுச்சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்நிலை மாறிவிட்டது. வேலைநேரம் அதிகரிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரவில்லை.

கண்டக்டர் இல்லாத புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை ஏற்ற மறுக்கின்றனர். பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் உட்காரும் இடம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம் என்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இந்த ஆண்டு நூறுநாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமில்லாத, அவர்களுக்கு ஏற்ற வேலை அளிப்பது, நிர்ணயித்த வேலையை செய்து முடித்ததும் கிளம்பிச்செல்வது உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் கண்டக்டர் இல்லாத பேருந்துகள், ஒன் டூ ஒன் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை வழக்கம் போல ஏற்றிக் கொள்வது என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கிளம்பிச் சென்றனர்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு