×

மாநகராட்சி தடை விதித்தும் ஓட்டல்கள், கடைகளில் மீண்டும் பாலித்தீன் பயன்பாடு டாஸ்மாக்கிலும் பிளாஸ்டிக் டம்ளர்கள் உபயோகம்

திண்டுக்கல், ஆக. 14: திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பயன்பாடு மீண்டும் தலைதூக்கி உள்ளது. வரும் 2019, ஜனவரி 1 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இத்தடையானது அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களில் கடந்த 1.7.2018 முதல் அமலுக்கு வந்துள்ளன. 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகள் உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகளை சேர்த்து வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவைகள் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், உணவுக்கழிவுடன் வீசப்படும் கேரி பைகளை கால்நடைகள் சாப்பிடுவதால், அவற்றின் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும். பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் உண்டாகும் நச்சுப்புகையை சுவாசிப்பதால் புற்றுநோய் மற்றும் சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக்கில் வைத்து உண்ணுதல் மற்றும் பிளாஸ்டிக் பைகளை சாக்கடையில் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மளிகைக்கடை, உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களிடம், பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்களும் டாஸ்மாக் பார்களில், பெட்டிக்கடைகளில் தங்கு தடையின்றி விற்கப்படுகின்றன. இதனால் சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன.

மீதமுள்ள உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து தெருவோரங்களில் வீசுகின்றனர். இவைகளை கால்நடைகள் உண்பதால் உயிரிழந்து தெருக்களில் கிடக்கின்றன. இச்சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல துணிப்பைகள், பாத்திரங்கள் மற்றும் கூடைகளை எடுத்துச்செல்வது அவசியம். மேலும் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பாலித்தீன் பைகளில் விற்பனை செய்யக்கூடாது. மாறாக பேப்பர், சணல், துணி போன்றவற்றிலான பைகளில் மட்டுமே பொட்டலமிட்டு தரவேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு