×

திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடம் காலி; கால்நடைகளும் ‘காலி’ உதவியாளர் சிகிச்சையால் உயிர் விடும் கால்நடைகள் மாற்றுத்தொழிலாலும் விவசாயிகள் மன உளைச்சல்

திண்டுக்கல், ஆக. 14: திண்டுக்கல் மாவட்ட அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளது. மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிப்பதால் கால்நடைகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன. மாற்றுத்தொழிலும் பாதிப்படைவதால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்டு போடிநாயக்கன்பட்டி சாலையில் கால்நடைகளுக்கான அரசு மருத்துவமனை செயல்படுகிறது. தினமும் காலை 8 - பகல் 12 மணி வரையிலும், மதியம் 3 - 5 மணி வரை இம்மருத்துவமனையின் பணி நேரமாக உள்ளது. பசு, எருமை மாடுகள், நாய், ஆடு, கோழி, குதிரைகள் உள்ளிட்டவைகளுக்க சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 100 கால்நடைகள் வரை சிகிச்சை தரப்படுகிறது.
ஒருபுறம் கால்நடைகள் பெருகினாலும், மறுபுறம் சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் சுகாதார பணியாளர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர். 4 டாக்டர்கள் இருக்கும் இடத்தில், ஒரே ஒரு டாக்டர் (அப்துல் காதர்) மட்டுமே பணியில் உள்ளார்.

அவரே இம்மருத்துவமனையின் முதன்மை அதிகாரியாகவும் உள்ளார். டாக்டர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக 2 பயிற்சி மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களும் பயிற்சி முடிந்து வேறு எங்காவது பணியமர்த்தப்படுவார்கள் என்பதால், அன்றாடம் கால்நடைகளுடன் வந்து ஏராளமான விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அரசு கால்நடை மருத்துவமனைகள் பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடக்கின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து குள்ளனம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜூ கூறுகையில் , ‘‘ஏற்கனவே விவசாயம் கைவிட்டதால், விவசாயிகள் பல்வேறு கடன் சுமையில் தத்தளிக்கின்றனர். இப்போது கால்நடை வளர்ப்பும் பெரும் சவாலாக உள்ளது. பருவகால மாற்றம் காரணமாக கோழிகள் கழிசல் நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கின்றன.

பேரூராட்சிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவமனைக்கு போனால் டாக்டர்கள் இருப்பதில்லை. கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மலைவாழ் மக்கள் கால்நடை வளர்ப்போர் சங்க நிர்வாகி கூறுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் இருந்து விவசாய பொருட்களை குதிரைகளின் மேலே, மூட்டைகளாக அடுக்கி வைத்து கீழே கொண்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு கால்நடைகள் மிகவும் முக்கியம். ஆனால், வனப்பகுதிகளில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. இதனால், நோய்வாய்ப்பட்ட குதிரைகளை அழைத்துக் கொண்டு கொடைக்கானலில் உள்ள மருத்துவமனைக்கு போக வேண்டி உள்ளது. கொண்டு செல்லும் வழியிலேயே பல கால்நடைகள் உயிரிழந்து விடுகின்றன. பாம்பார்பட்டி, நாயுடுபுரம், அட்டுவம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்படாமல் உள்ளன. பல மருத்துவமனைகள் புதர் மண்டி கிடக்கின்றன. இதனால் கால்நடை வளர்ப்பு அழியும். எனவே, கால்நடை மருத்துவமனையில் உரிய டாக்டர்களை நியமனம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்