×

திரவுபதி, முத்துமாரி அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

திருவள்ளூர், ஆக. 14: திருவள்ளூர் பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. இதைத் தொடர்ந்து, தினசரி 10 நாட்கள் அம்மன் வீதியுலா நடைபெற்றது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு, இன்னிசை வாசித்தல் நடந்தது. கடந்த 6ம் தேதி காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு  அறுசுவை உணவு வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று முன்தினம் மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் கடைபிடித்து வந்த பக்தர்கள் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு, அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கை முழங்க திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல், காக்களூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் 19ம் ஆண்டு தீ மிதி திருவிழா நேற்று மாலை  நடைபெற்றது. தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு உற்சவர் அம்மன் ராஜராஜேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி, கருமாரி, நாராயணி, ஆண்டாள், சாமூண்டீஸ்வரி, பராசக்தி, மகிஷாசூரமர்தினி என தினசரி ஒரு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10ம் நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கிராம பெண்கள் ஒன்றுகூடி, கோயில் முன்பு பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, விரதமிருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் உற்சவர் முத்து மாரியம்மன் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...