×

திருமுல்லைவாயல் குளக்கரை சாலையில் தேங்கிய மழைநீர்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஆவடி, ஆக.14: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், குளக்கரை பிரதான சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடப்பதால் பாதசாரிகள் நடக்கமுடியவில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். ஆவடி நகராட்சி, 7வது வார்டான திருமுல்லைவாயலில், குளக்கரை பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக மாடவீதிகள், எட்டியம்மன் நகர், வள்ளலார் நகர், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர், எஸ்.வி.டி நகர், மாசிலாமணீஸ்வரர் நகர்,  திருமுல்லைவாயல் காலனி, வெங்கடாச்சலம் நகர்,  ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையை அரிக்கம்பேடு, பொத்தூர், உப்பிரபாளையம், கொள்ளுமேடு, வெள்ளானூர், திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வர பயன்படுத்துகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், இச்சாலை வழியாக திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவில், சிவன் கோவில், எட்டியம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகிய பிரசித்தி பெற்ற கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள் மேலும், இச்சாலையில் தனியார் பள்ளிக்கூடம், மருத்துவமனை, குடியிருப்புகளும் ஏராளமாக உள்ளன. இச்சாலையை  தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், நோயாளிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக இச்சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இச்சாலையில் மாணவ மாணவியர்கள் சைக்கிளில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் அவர்கள் புத்தக பையுடன் சாலையில் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். மேலும்,  சேதமடைந்து கிடக்கும் இச்சாலையில் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி  இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். அவர்கள் சாலையில் பள்ளங்களில்  சிக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இச்சாலையில் ஆட்டோக்கள், கார்கள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கின்றன. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் பல முறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்து உள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனிமேலாது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக கிடக்கும் திருமுல்லைவாயில், குளக்கரை  சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்