×

ஒன்றிய சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து உருளும் போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை, ஆக.14: பெரியபாளையம் அருகே வண்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ள போக்குவரத்துக்கு தகுதி இழந்த ஒன்றிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உருளும் போராட்டம் நடைபெற்றது. பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் வண்ணாங்குப்பம் ஊராட்சியில் பெரிய வண்ணாங்குப்பம், சின்ன வண்ணாங்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு வேலை சம்பந்தமாகவும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூக்களை எடுத்துச்செல்லவும்,  பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்கு ெசன்று வரவும் வண்ணாங்குப்பம் ஒன்றிய சாலையை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த கிராமங்களுக்கு செல்லும் ஒன்றிய சாலைகள் கடந்த 8 வருடமாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து பள்ளங்களில் தேங்கி நிற்கிறது.

இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை பெரியபாளையம் வட்டாரவளர்ச்சி அலுவலகத்திலும், வண்ணாங்குப்பம்  ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கும்மிடிபூண்டி தொகுதி எம்எல்ஏ விடமும் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் சாலை மறியலும் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெரிய வண்ணாங்குப்பம், சின்ன வண்ணாங்குப்பம் பகுதி மக்கள் அனைத்து கட்சி சார்பில் தண்டலம் முதல் வண்ணாங்குப்பம் - ஆத்துப்பாக்கம் வரை உள்ள ஒன்றிய சாலையை சீரமைக்க கோரி சாலையில் உருளும் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதற்கு ஊத்துக்கோட்டை போலீசார் அனுமதி தரமறுத்து தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி நேற்று 2 கிராம மக்களும் கிராம சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி சாலையில் உருண்டனர். தகவல் அறிந்து பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் நக்கீரன் சம்பவயிடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது புதிய சாலை அமைக்க ரூ60 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பணிகள் ஒரு மாதத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...