×

கழிப்பட்டூர் தாங்கலை சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை

திருப்போரூர், ஆக.14 : திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய முட்டுக்காடு  ஊராட்சியில் அடங்கிய கழிப்பட்டூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில்  ஏரியின் சிறிய வடிவமான தாங்கல் உள்ளது. இது பொதுப்பணித்துறையால்  பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதில் மண்  எடுக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. தற்போது பழைய மாமல்லபுரம் சாலையின்  வளர்ச்சி காரணமாக இந்த தாங்கலைச் சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகள்  உருவாகி விட்டன. இருப்பினும் இதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள  கிணறுகள், போர்வெல் போன்றவற்றுக்கு நிலத்தடி நீராதாரமாக இந்த தாங்கல்  உள்ளது. தற்போது இந்த தாங்கலில் முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து  காணப்படுகிறது.

இதனால், இந்த தாங்கலில் குளிக்க வரும் பொதுமக்கள் இதில்  சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இந்த தாங்கலை ஒட்டி அரசு நடுநிலைப்பள்ளி  உள்ளது. மழைக்காலங்களில் இந்த தாங்கலின் நீர், பள்ளி வளாகம் வரை உயரும்  அபாயமும் உள்ளது. ஆகவே, இந்த தாங்கலை பாதுகாக்கும் விதத்தில் பாதுகாப்பு  வேலி அமைத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்றும், தாங்கலில்  நிறைந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றும், கழிப்பட்டூர்  பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...