×

குண்டும் குழியுமான பொன்விளைந்தகளத்தூர் - திருக்கழுக்குன்றம் சாலை: சீரமைக்காவிட்டால் போராட மக்கள் முடிவு

செங்கல்பட்டு, ஆக.14: குண்டும் குழியுமாக உள்ள பொன்விளைந்த களத்தூர் திருக்கழுக்குன்றம் சாலையை சீரமைக்காவிட்டால் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.  செங்கல்பட்டு பொன்விளைந்த களத்தூர் வழியாக திருக்கழுக்குன்றத்துக்கு சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையில் வ.உ.சி. நகர் செல்வி நகர், ஒத்திவாக்கம், பொன்விளைந்த களத்தூர், பொன் பதற்கூடம், பள்ளமேடு, நாவலூர் நரப்பாக்கம், வீரக்குப்பம், சாலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பொன்விளைந்த களத்தூரில் இருந்து நாவலூர் வரை செல்லும் சுமார் 10 கிலோ மீட்டர் கொண்ட தார்ச்சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில்  ஆங்காங்கே பெரியபள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.

சமீபத்தில் பெய்த இரண்டு நாட்கள் லேசான மழைக்கே சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் இந்த கிராமங்களில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கூலித் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எப்போதாவது ஒரு முறை வரும் தனியார் பேருந்தும் சாலையை காரணம் காட்டி நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் அவசரத்துக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள் நீண்ட தூரம் நடந்து வந்து பொன்விளைந்த களத்தூருக்கோ அல்லது நாவலூர் வரையிலோ நடந்து வந்து அதிக பணம் செலவழித்து வாகனங்களில் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இரவு நேரங்களில் டூவிலரில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். சாலையின் இரண்டு புறமும் காப்புக்காடுகள் இருப்பதால் வனத்துறை ஒப்புதல் தரவில்லை எனவே  இந்த சாலையை போடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஐந்து வருடங்களாக சாலை செப்பனிடப்படாமல் உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை செப்பனிடப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை  உடனடியாக செப்பனிட வேண்டும். சாலையை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட தனியார், அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். இல்லாவிட்டால் நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த இருப்பதாக கூறினர்.   

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...