×

மின்சார விரைவு ரயில்கள் ரத்து செய்ததை கண்டித்து பயணிகள் ரயில் மறியல் போராட்டம்: ஊரப்பாக்கத்தில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி, ஆக. 14: சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று காலை 8.15 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு வந்த மின்சார ரயிலை மறித்து, 300க்கும் மேற்பட்ட பயணிகள் திடீர் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயணிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற மின்சார ரயில் விபத்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபர்கள் பலியாகினர். இதையடுத்து செங்கல்பட்டில் இருந்து சென்னை வரை இயங்கி வந்த விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது.

இதனால் செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், பூங்கா பகுதிகளுக்கு செல்லவேண்டிய ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இந்த ரயிலை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். சாதாரண மின்சார ரயிலில் பயணம் செய்தால், செங்கல்பட்டில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு மேலாகிறது. இதுவே விரைவு ரயிலில் பயணம் செய்தால், நாங்கள் ஒன்றரை மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடிகிறது. தற்போது பரங்கிமலை ரயில் விபத்ைத காரணம் காட்டி, செங்கல்பட்டில் இருந்து வரும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாங்கள் குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, இவ்வழித்தடத்தில் மீண்டும் விரைவு ரயில்களை இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கப்படாவிட்டால், நாங்கள் மிகப்பெரிய அளவில் கண்டன போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என்று கூறினர்.

பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என ரயில்வே போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து ரயில் பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் செங்கல்பட்டு- சென்னை இரண்டு வழித்தடங்களிலும் சுமார் அரைமணி நேரம் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, ரயில் மறியல் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதாக ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த துரைசாமி (47), சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த வெங்டேசன் (47), அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40), காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த மோகன் (33) ஆகியோரை தாம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...