×

மக்காச்சோளத்தில் தண்டு துளைப்பான் தாக்குதல்

கிருஷ்ணகிரி, ஆக.14:மக்காச்சோளப்பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் மற்றும் ஊத்தங்கரை வட்டாரத்தில் 400 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு மக்காச்சோளப்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் அறிகுறி தென்படுவதாக தகவல் வந்ததையடுத்து, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், ஊத்தங்கரை வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் கொண்ட குழு ஏலச்சூர், காரப்பட்டு மற்றும் தகரப்பட்டு ஆகிய கிராமங்களில் நிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

இதில், மக்காச் சோளப்பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் ஒரு சில வயல்களில் பரவலாக காணப்பட்டது. இந்த தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு உள்ளாகும் பயிர்களின் இலையின் மேற்பகுதியில் உள்ள பச்சையத்தை இளம்புழு சுரண்டி தின்றுவிடும். பிறகு குருத்துப்பகுதியில் உள்ள இலை சுருள் வழியாக நகர்ந்து, நடுக்குருத்து பகுதியில் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்த விளக்கு பொறி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். நெல் தவிடு 10 கிலோ, வெல்லம் 25 கிலோ மற்றும் குளோர்பைரிபாஸ் 1 லிட்டர் கலந்து சிறிய உருண்டையாக உருட்டி வயல்களை சுற்றி வைக்க வேண்டும். இமாமெக்டின் பென்சோயேட் இரண்டு கிராம், லிட்டரில் கலந்து தெளிக்கலாம். இந்த முறைகளை பின்பற்றி தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்