×

ஜவகர் மில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மூடல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, கோவை பஸ்கள் இயக்கம்

சேலம், ஆக.14:சேலம் ஜவகர் மில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்கிய மதுரை, கோவை, திருச்சி மார்க்க பஸ்கள் அனைத்தும் நேற்று காலை முதல், பழையபடி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டது. சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் தளத்தை ₹5 கோடியில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதனால், அங்கிருந்து இயங்கிய பஸ்களை சேலம் போஸ் மைதானத்திற்கும், ஜவகர் மில் திடலுக்கும் பிரித்து தற்காலிக பஸ் ஸ்டாண்டுகளை அமைத்து இயக்கினர். இதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் புதிய பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் வேலை முடிந்ததையடுத்தும், போஸ் மைதான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் காலி செய்யப்பட்டு சென்னை, வேலூர், திருவண்ணாமலை மார்க்க பஸ்கள் மீண்டும் பழையபடி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்க தொடங்கியது. இதே போல ஜவகர் மில் திடல் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருச்சி, கேரள மார்க்க பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, புதிய பஸ் ஸ்டாண்டின் மற்றொரு பகுதி பஸ் இயக்கத்திற்கு தயார் ஆனதால், ஜவகர் மில் திடல் நேற்று, அந்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டது.

இதன்காரணமாக நேற்று காலை முதல், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழையபடி மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, கேரள மார்க்க பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசல் இன்றி பஸ்களை இயக்க வசதியாக ஒவ்வொரு பஸ்களும் புறப்படும் 20 நிமிடத்திற்கு முன் பஸ் ஸ்டாண்டிற்குள் கொண்டு வரப்பட்டு, புறப்பட்டன. கார், டூவீலர்களை பஸ் ஸ்டாண்டிற்குள் கொண்டு வரக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்