×

சிட்லிங் ஊராட்சியில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சிட்லிங் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘அரூர் தாலுகா சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட ஆறு, சிற்றோடை, வனப்பகுதிகளில் தினமும் மணல் கொள்ளை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. லாரிகளில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு, சேலம் மாவட்டத்திற்கு கடத்தப்படுகிறது. இதை தட்டி கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சிட்லிங் பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, ஜானகிராமன், ராமன், சாக்கன்சர்மா, நந்தன், கிள்ளிவளவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம், பென்னாகரம் நெடுஞ்சாலையில் மேம்பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வழங்கிய இடத்திற்கு மாற்றம் செய்து, நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போதைய சமூக நடைமுறைக்கு ஒத்துவராது.

பிற்காலத்தில் தனியார் ஆதிக்கம் வலுப்பெறும். எனவே, மக்களிடையே உள்ள அச்ச உணர்வை தவிர்க்கும் வகையில், அரசுக்கு சொந்தமான இடத்தில், புதிய பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். அரசு அமைக்கும் பஸ் நிலையத்தில் ஏற்படும் கடை ஒதுக்கீடு மற்றும் அனைத்து வியாபாரத்திலும் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார வசதி மேம்படுத்த ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏரிமலை கிராம இருளர் குடும்பத்தினர் கொடுத்த மனுவில், ‘பென்னாகரம் தாலுகா திருமல்வாடி ஊராட்சிக்குட்பட்ட ஏரிமலையில், 66 இருளர் குடும்பத்தினர் குடிசைகளில் வசித்து வருகிறோம். இதனால் மழை, வெயிலால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். எனவே, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ஏரிமலையில் வசிக்கும் அனைத்து இருளர் குடும்பத்தினருக்கும் வீடு ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

 தர்மபுரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதிமய்யத்தின் மாவட்ட பொறுப்பாளர் சத்திய நாராயணா, சரவணகுமார், ரவிசந்திரன், ராஜசேகர், கலை செந்தில்குமார் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘அனைத்து ஊராட்சியிலும் நாளை நடக்க உள்ள கிராம சபை கூட்டம் தொடர்பாக, 7 நாட்களுக்கு முன்பே அனைவருக்கும் தெரியும் வகையில் அழைப்பு தர வேண்டும். கூட்டத்தில் இதுவரை நடந்த வரவு செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை, திட்ட அறிக்கை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். கிராசபை கூட்டத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கிராம நலன் கருதி பொதுமக்கள் வைக்கும் தீர்மானங்களை பதிவு செய்ய வேண்டும். கூட்டத்தில், தீர்மான நகல் கேட்பவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா