×

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் மேட்டூருக்கு அருகிலிருந்தும் குடிநீருக்கு தட்டுப்பாடு

சேலம், ஆக.14:மேட்டூர் அணைக்கு அருகே வசித்தாலும், குடிநீருக்கு தவிப்பதாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், ஜலகண்டாபுரம் அடுத்த செலவடை அழகாபுரம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘அழகாபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் வீட்டிற்கு உபயோகப்படுத்தவும், குடிநீருக்கும் தண்ணீர் வசதி இல்லை. இதனால், பணம் கொடுத்து, தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடியிருப்பில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தான் மேட்டூர் அணை உள்ளது. அங்கு கரைபுரண்டு வெள்ளம் ஓடினாலும், எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.

இதேபோல், போதுமான மின்விளக்கு வசதியும், பஸ் வசதியும் பல ஆண்டுகளாக இல்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுபற்றி கேட்டால், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,’ என்றனர்.இதேபோல், சங்ககிரி அடுத்த நாகிசெட்டிப்பட்டியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘அப்பகுதியில் குடிநீர் மோட்டர் பழுதானதால், 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின் இணைப்பு, பசுமை வீடு போன்றவற்றை பெற, வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்ற நிபந்தணையை தளர்த்த வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை